நீங்களும் தான் பேட்டிங் ஆடுறீங்க! ரோஹித் சர்மா ஆடுறத பார்த்து கத்துக்கங்க! ஆஸி., வீரர்களுக்கு மைக் ஹசி அட்வைஸ்
இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் ஸ்கோர் செய்ய திணறிவரும் நிலையில், இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவை முன்னுதாரணமாக காட்டி அறிவுரை வழங்கியுள்ளார் மைக் ஹசி.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று 2-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான இந்த டெஸ்ட் தொடரின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. இந்த தொடர் மிகக்கடுமையான போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதலிரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி முழுமையாக இந்திய அணியிடம் சரணடைந்து படுதோல்விகளை அடைந்தது.
நாக்பூரில் நடந்த முதல் டெஸ்ட்டில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, 2வது டெஸ்ட்டில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் தோற்று இந்த தொடரை வெல்லும் வாய்ப்பை ஆஸ்திரேலிய அணி இழந்துவிட்டது.
ஸ்பின்னிற்கு சாதகமான இந்திய ஆடுகளங்களில் டெஸ்ட் போட்டிகளில் ஜெயிக்க ஸ்பின் தான் முக்கியமான அஸ்திரம் என்பதை உணர்ந்து நேதன் லயன், டாட் மர்ஃபி, குன்னெமன், அஷ்டான் அகர் என 4 ஸ்பின்னர்களுடன் இந்தியாவிற்கு வந்த ஆஸ்திரேலிய அணி, முதல் டெஸ்ட்டில் அணி தேர்வில் தவறிழைத்துவிட்டது. 2வது டெஸ்ட்டில் அந்த அணியின் ஸ்பின்னர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஸ்பின்னை பயன்படுத்துவதில் ஓரளவிற்கு தேறிய ஆஸ்திரேலிய அணி, இந்திய ஸ்பின்னர்களை எதிர்கொள்வதில் கோட்டைவிட்டது.
அஷ்வின் மற்றும் ஜடேஜாவின் சுழலை சமாளிக்க முடியாமல் இந்திய அணியிடம் 2 போட்டிகளிலும் மண்டியிட்டு சரணடைந்தது. 2வது டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணியின் கை ஓங்கியிருந்தது. ஆனால் ஒரே செசனில் 9 விக்கெட்டுகளை இழந்து, அதில் 7 விக்கெட்டுகளை ஜடேஜாவிடம் இழந்து படுதோல்வி அடைந்தது. ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்களான ஸ்மித், லபுஷேன் கூட திணறுகின்றனர். ஆஸ்திரேலிய வீரர்கள் தீவிரமான பயிற்சி செய்தும் ஸ்பின்னை எதிர்கொள்ள திணறும் நிலையில், ரோஹித் சர்மா ஸ்பின்னர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி அடித்து ஆடி முதல் டெஸ்ட்டில் சதமடித்து 120 ரன்களை குவித்தார். 2வது டெஸ்ட்டிலும் நன்றாகவே தொடங்கினார். ஆனால் 2 இன்னிங்ஸ்களிலும் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை.
இந்த தொடரில் முதல் 2 போட்டிகளில் 183 ரன்களை குவித்து, அதிக ரன்களை குவித்த வீரராக ரோஹித் சர்மா திகழ்கிறார். ரோஹித் சர்மா ஸ்பின்னர்களை செட்டில் ஆகவிடாமல், அடித்து ஆடி ஸ்கோர் செய்வதால் தான், மற்ற வீரர்கள் திணறிய போதிலும், அவரால் ஜொலிக்க முடிந்தது. அதை சுட்டிக்காட்டி ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார் மைக் ஹசி. ஆஸ்திரேலிய வீரர்கள் ரோஹித் சர்மாவின் ஃபார்முலாவை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
டான் பிராட்மேனை விட அதிக சராசரி.. டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த ஹாரி ப்ரூக்
இதுகுறித்து பேசிய மைக் ஹசி, ரோஹித் சர்மா பேட்டிங் ஆடுவதிலிருந்து ஆஸ்திரேலிய வீரர்கள் ஐடியா எடுத்துக்கொள்ளலாம். ஸ்பின்னிற்கு எதிராக ஸ்கோர் செய்வதே, இந்திய கண்டிஷனில் ஸ்பின்னை எதிர்கொள்ள சிறந்த வழி. அதைத்தான் ரோஹித் சர்மா செய்கிறார். ஸ்பின்னிற்கு சாதகமான இந்திய கண்டிஷன் இந்திய வீரர்களுக்கு பழக்கப்பட்டது என்பதால் அந்த ஆடுகளங்களில் எப்படி ஆடவேண்டும் என்று அவர்களுக்கு நன்கு தெரியும். எனவே ஆஸ்திரேலிய வீரர்கள் ஒவ்வொருவரும் எப்படி ஸ்கோர் செய்யவேண்டும் என்ற வழிகளை தேடவேண்டும்.
ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் தனித்துவமான பேட்டிங் ஆடும் ஸ்டைல் இருக்கிறது. சில வீரர்கள் அதிரடியாக பவுண்டரி அடித்து ஆட பார்ப்பார்கள். சிலர் நின்று ஆட விரும்புவார்கள். பேட்ஸ்மேன்கள் அவரவர் பலத்திற்கு ஆடவேண்டும். ஹேண்ட்ஸ்கோம்ப் 2வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் நன்றாக ஆடினார். ஆனால் 2வது இன்னிங்ஸில் சரியாக ஆடவில்லை. இந்திய கண்டிஷனில் நின்று ஆடி ஸ்கோர் செய்ய அதிர்ஷ்டமும் கொஞ்சம் தேவை என்றார் மைக் ஹசி.