இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பாரம்பரிய டெஸ்ட் தொடரான ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 251 ரன்கள் வித்தியாசாத்தில் அபார வெற்றி பெற்றது. 

பர்மிங்காமில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர் ஸ்மித் தான். இரண்டு இன்னிங்ஸ்களிலுமே சதமடித்து அசத்தினார். முதல் போட்டியில் இரு அணிகளுக்கும் இடையேயான வித்தியாசமாக ஸ்மித் திகழ்ந்தார். அவர் மட்டுமே 286 ரன்களை குவித்திருந்தார். 

எனவே ஆஷஸின் அடுத்தடுத்த போட்டிகளில் இங்கிலாந்து ஜெயிக்க வேண்டுமென்றால் ஸ்மித்தை கண்டிப்பாக கட்டுப்படுத்தியாக வேண்டும். இல்லையெனில் இங்கிலாந்து வெற்றி பெறுவது கடினமாகிவிடும். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடையை அனுபவித்து திரும்பியுள்ள ஸ்மித், மேலும் பன்மடங்கு வலிமையுடன் திரும்பியுள்ளார் என்பது அவரது ஆட்டத்திலேயே தெரிகிறது. 

ஸ்மித்தை கண்டிப்பாக விரைவில் வீழ்த்தியாக வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து உள்ள நிலையில், ஸ்மித்துக்கு எதிராக யாரை ஆயுதமாக பயன்படுத்தலாம் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக் கேட்டிங் கருத்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய மைக் கேட்டிங், ஜோஃப்ரா ஆர்ச்சர் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிவப்பு பந்தில் பந்துவீசி நாம் பார்த்ததில்லை. அவர் சிவப்பு பந்தில் எப்படி ஸ்விங் செய்கிறார் என்று பார்க்கலாம். நல்ல வேகத்தில் வீசுகிறார். ஆர்ச்சர் ஸ்டம்புக்கு நேராக வீசுவதால், அவர் ஸ்மித்துக்கு அச்சுறுத்தலாக திகழ்வார் என்று கேட்டிங் தெரிவித்துள்ளார்.