இங்கிலாந்து அணியிடம் தோற்ற இந்திய அணியை இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கிண்டலடித்துள்ளார். 

உலக கோப்பை தொடரில் இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நேற்று நடந்த போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 338 ரன்களை குவித்தது. 339 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் பூரான் சதமடித்தும் அந்த அணியால் வெற்றி பெறமுடியவில்லை. கடைசிவரை போராடியும் வெஸ்ட் இண்டீஸ் அணியால் 315 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. இதையடுத்து இலங்கை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

வெஸ்ட் இண்டீஸ் அணியின் விக்கெட்டுகள் சரிந்தாலும் பூரானும் ஃபேபியன் ஆலனும் முடிந்தவரை போராடினர். ஆனாலும் அந்த அணியால் வெற்றி இலக்கை எட்டமுடியாமல் போனது. 

வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியடைந்திருந்தாலும், அந்த அணியின் போராட்ட குணத்தை ஹர்ஷா போக்ளே டுவிட்டரில் பாராட்டினார். இலக்கு மிக கடினமாக இருந்தபோதிலும் அதை எட்ட வெஸ்ட் இண்டீஸ் அணி கடுமையாக போராடியது. ஆனாலும் அந்த அணியால் வெல்ல முடியவில்லை  என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் போராட்ட குணத்தை பாராட்டியிருந்தார். 

இதற்கு, இந்திய அணியை போல அல்ல என்று இந்திய அணியை கிண்டலடிக்கும் விதமாக பதிவிட்டுள்ளார் மைக்கேல் வாகன். 

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 338 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி 306 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது. இந்த போட்டியில் கடைசி 5 ஓவர்களில் தோனியும் கேதரும் போராடவே செய்யாமல் மந்தமாக ஆடினர். தோனியும் கேதரும் போராடாதது கடும் விமர்சனத்துக்குள்ளானது. இந்நிலையில், அதை சுட்டிக்காட்டும் விதமாக, வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியை போல அல்ல என்று நக்கலாக பதிவிட்டுள்ளார் மைக்கேல் வாகன்.