ICC WTC ஃபைனலில் ராகுல் - கில் இருவரில் யார் ஓபனிங்கில் இறங்கணும்..? காரணத்துடன் கூறும் மைக்கேல் வான்
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ரோஹித்துடன் ராகுல் தான் தொடக்க வீரராக இறங்க வேண்டும் என்றும் ஷுப்மன் கில்லை இறக்கக்கூடாது என்றும் மைக்கேல் வான் தெரிவித்துள்ளார்.
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் முன்னேறியுள்ளன. 2019-2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்னேறிய இந்திய அணி, ஃபைனலில் நியூசிலாந்திடம் தோற்று கோப்பையை இழந்த நிலையில், இந்த முறை கண்டிப்பாக கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்குகிறது.
வரும் ஜூன் 7ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் ஃபைனல் தொடங்குகிறது. இந்த ஃபைனலுக்கான இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அறிவிக்கப்பட்டுவிட்டன.
இந்திய டெஸ்ட் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட அஜிங்க்யா ரஹானே, ஐபிஎல்லில் அபாரமாக ஆடி அசத்தியதன் விளைவாகவும், வெளிநாடுகளில் நல்ல ரெக்கார்டை கொண்ட அனுபவம் வாய்ந்த வீரர் என்பதன் அடிப்படையிலும் இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் எடுக்கப்பட்டுள்ளார் ரஹானே.
IPL 2023: நான் நெனச்சது தப்பு ஆகிருச்சு..! அந்த 2 பசங்க தான் எங்க தோல்விக்கு காரணம்.. தோனி அதிரடி
டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, கேஎல் ராகுல், கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், ஷர்துல் தாகூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனாத்கத்.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கான இந்திய அணி சிறப்பாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. ராகுல் மற்றும் ஷுப்மன் கில் ஆகிய இருவரும் அணியில் இடம்பெற்றிருப்பதால், ரோஹித்துடன் யார் தொடக்க வீரராக இறங்குவார் என்பது பெரிய கேள்வியாக உள்ளது.
கடைசியாக இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஆடிய டெஸ்ட் தொடரின் தொடக்கத்தில் ராகுல் தான் தொடக்க வீரராக இறங்கினார். ஆனால் அவர் சரியாக ஆடாததால் ஷுப்மன் கில் தொடக்க வீரராக இறக்கப்பட்டார். ஆனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் நடக்கும் லண்டன் ஓவலில் கேஎல் ராகுல் 2019ல் டெஸ்ட்டில் சதமடித்திருக்கிறார். மேலும் இங்கிலாந்தில் 9 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 614 ரன்களை அடித்திருக்கிறார் ராகுல்.
இங்கிலாந்தில் ஆடிய அனுபவம் கொண்டவர் ராகுல். கில் இங்கிலாந்தில் 2 போட்டிகளில் மட்டுமே ஆடி 54 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். எனவே இங்கிலாந்தில் ஆடிய அனுபவம் ராகுலுக்குத்தான் இருக்கிறது. இந்நிலையில், இருவரில் யார் ரோஹித்துடன் தொடக்க வீரராக இறங்குவார் என்று தெரியவில்லை.
இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான், இங்கிலாந்து கண்டிஷனில் கேஎல் ராகுல் தான் தொடக்க வீரராக ஆடவேண்டும். ஷுப்மன் கில்லை இறக்கக்கூடாது. இங்கிலாந்தில் பந்து நகரும். எனவே ராகுல் தான் தொடக்க வீரராக ஆடவேண்டும். டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் ஒரே போட்டிதான். எனவே கடந்த காலங்களை மறந்துவிட வேண்டும். சிறந்த லெவனை இறக்குவதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.
ஷுப்மன் கில் ஸ்டிரைட்டில் சிறப்பாக ஆடுவார். ஆனால் அவரது பேட்டிங் டெக்னிக்கில் சில பிரச்னைகள் உள்ளன. பந்து நகர்ந்தால், அவரது கையை பந்தை நோக்கி அதிகமாக நகர்த்துகிறார். ராகுலை ஆடவைப்பார்களா என்று தெரியவில்லை. ஆனால் அவரைத்தான் ரோஹித்துடன் ஓபனிங்கில் இறக்க வேண்டும் என்று மைக்கேல் வான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.