இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கடைசி ஒருநாள் போட்டி பெங்களூருவில் நடந்துவருகிறது. 

தொடரை தீர்மானிக்கும் இந்த போட்டியில் இந்திய அணி, இரண்டாவது போட்டியில் ஆடிய அதே அணியுடன் தான் களமிறங்கியுள்ளது. முதல் போட்டியில், பேட்டிங் ஆடும்போது ஹெல்மெட்டில் அடிபட்டதால், இரண்டாவது இன்னிங்ஸில் ரிஷப் பண்ட் ஆடவில்லை. எனவே அவருக்கு பதிலாக கேஎல் ராகுல் விக்கெட் கீப்பிங் செய்தார். 

ரிஷப் பண்ட் சிகிச்சையில் இருந்ததால் இரண்டாவது போட்டியில் ஆடவில்லை. எனவே கேஎல் ராகுல் தான் அந்த போட்டியிலும் விக்கெட் கீப்பிங் செய்தார். கேஎல் ராகுல் நன்றாக விக்கெட் கீப்பிங் செய்ததை அடுத்து, பேட்டிங்கிலும் அவர் நல்ல ஃபார்மில் இருப்பதால் அவரையே விக்கெட் கீப்பராக ஆடவைக்கலாம் என்ற குரல்களும் எழுந்துள்ளன. 

இந்நிலையில், ரிஷப் பண்ட்டிற்கு பயப்படும் படியாக எதுவுமில்லை என்பதால், அவர் முழு உடற்தகுதியுடன் ஆட தயாராக இருந்த நிலையில், கடைசி போட்டியில் அவருக்கு அணியில் வாய்ப்பளிக்கவில்லை. கேஎல் ராகுல் இருக்கும் தைரியத்தில் ரிஷப் பண்ட்டை கழட்டிவிட்டது இந்திய அணி. அவருக்கு பதிலாக கடந்த போட்டியில் ஆடிய மனீஷ் பாண்டே தான் இந்த போட்டியிலும் ஆடுகிறார். 

ரிஷப் பண்ட்டை இந்த போட்டியில் சேர்க்காதது சரியில்லை என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் ஸ்லேட்டர் தெரிவித்துள்ளார். இந்தியா - ஆஸ்திரேலியா தொடரில் வர்ணனை செய்துவரும் ஸ்லேட்டர், இதை தெரிவித்தார்.

Also Read - ஸ்மித் அபார சதம்.. இந்திய அணிக்கு எளிதான இலக்கை நிர்ணயித்த ஆஸ்திரேலியா

”ரிஷப் பண்ட்டை அணியில் சேர்க்காதது தவறு. அவருக்கு ஹெல்மெட்டில் பந்தில் படவில்லை என்றால், அவர் மூன்று போட்டியிலும் ஆடியிருப்பார். கன்கசனில் இருந்த அவருக்கு பதிலாக மற்றொரு வீரர் நன்றாக விக்கெட் கீப்பிங் செய்தார் என்பதற்காக, அவரை ஆடவைத்து விட்டு ரிஷப் பண்ட்டை ஒதுக்குவதில் லாஜிக்கே இல்லை. அது சரியான அணுகுமுறை அல்ல” என்று ஸ்லேட்டர் தெரிவித்தார்.