ஒரு வீரர் 50 ரன்கள் அடிப்பதும், நல்ல ஃபார்மில் நன்றாக ஆடிக்கொண்டிருக்கும் பேட்ஸ்மேனை அபாரமான ஃபீல்டிங்கின் மூலம் ரன் அவுட் செய்வதும் ஒன்றுதான்.

பேட்டிங் மற்றும் பவுலிங்கிற்கு நிகராக ஃபீல்டிங்கும் மிக முக்கியம். ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் வீரர்களின் ஃபிட்னெஸிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. வீரர்கள் முழு உடற்தகுதியுடன் இருந்தால்தான் ஃபீல்டிங் சிறப்பாக செய்ய முடியும் என்பதால் உடற்தகுதிக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். 

ஜாண்டி ரோட்ஸ் உலகின் தலைசிறந்த ஃபீல்டராக திகழ்ந்தார். பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் சைமண்ட்ஸ், பாண்டிங் என ஒவ்வொருவருமே சிறந்த ஃபீல்டராக திகழ்ந்தனர். ஆனால் அப்போதெல்லாம் இந்திய அணியில் ஃபீல்டிங் பெரிதாக சொல்லிக்கொள்ளும்படியாக இருக்காது. யுவராஜ் சிங் மற்றும் முகமது கைஃப் மட்டுமே அசாத்தியமான கேட்ச்களை பிடிக்கக்கூடிய அபாரமான ஃபீல்டர்களாக திகழ்ந்தார்கள்.

ஆனால் அதன்பின்னர் தோனி கேப்டனான பிறகு வீரர்களின் உடற்தகுதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. தோனி தலைமையிலான இந்திய அணியில் உருவான தலைசிறந்த ஃபீல்டர்கள்தான் ரெய்னாவும் ஜடேஜாவும். ரெய்னா இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டுவிட்டார். ஜடேஜா உலக கோப்பை அணியில் இருக்கிறார். 

தோனிக்கு பிறகு கேப்டன் கோலி தலைமையிலான இந்திய அணியிலும் ஃபிட்னெஸிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. தற்போதைய இந்திய அணியில் அனைவருமே சிறந்த ஃபீல்டர்களாகத்தான் உள்ளனர். இந்நிலையில், தற்போதைய கிரிக்கெட்டில் உலகின் சிறந்த ஃபீல்டர் யார் என்ற கேள்விக்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், சற்றும் யோசிக்காமல் ஜடேஜா தான் சமகால கிரிக்கெட்டின் சிறந்த ஃபீல்டர் என்று தெரிவித்துள்ளார். 

ஜடேஜா அசாத்தியமான கேட்ச்களை அசால்ட்டாக பிடிப்பதோடு அபாரமான ரன் அவுட்டுகளை செய்து மிரட்டிவிடுவார். ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தக்கூடிய ஃபீல்டர் அவர் என்பதில் துளியும் சந்தேகமில்லை.