Asianet News TamilAsianet News Tamil

சிவகார்த்த்கேயனின் கனா மூவி சஜீவன் சஜனாவா இது? அறிமுக போட்டியிலேயே இப்படியொரு சாதனை!

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றி பெறச் செய்து புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

MI beat DC by 4 wickets difference after Sajeevan Sajana hit her first six in Final ball of the match in her debut match at Bengaluru
Author
First Published Feb 24, 2024, 1:16 PM IST

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசன் தற்போது தொடங்கியுள்ளது. ஷாருக்கான், வருண் தவான், டைகர் ஷெராஃப், கார்த்திக் ஆர்யன், சித்தார்த் மல்கோத்ரா ஆகியோரது கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து 2ஆவது சீசனுக்கான முதல் போட்டி தொடங்கியது. இதில், நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொண்டது.

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் முதலில் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில், கேப்டன் மெக் லேனிங் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷஃபாலி வர்மா 1 ரன்னில் நடையை கட்டினார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் அலீஸ் கேப்ஸி இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். இதில், ரோட்ரிக்ஸ் 42 ரன்களில் ஆட்டமிழக்க, கேப்ஸி 75 ரன்கள் குவித்தார்.

இறுதியாக 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து டெல்லி கேபிடல்ஸ் 171 ரன்கள் குவித்தது. பின்னர், கடின இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹேலி மேத்யூஸ் ரன் ஏதும் இல்லாமல் ஆட்டமிழந்தார். யாஸ்திகா பாட்டியா 57 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த நாட் சிவர் பிரண்ட் 19 ரன்களில் வெளியேறினார்.

கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 55 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒரு கட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியானது 19 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 6 பந்தில் மும்பை வெற்றிக்கு 12 ரன்கள் தேவை இருந்தது. அந்த ஓவரை டெல்லி கேபிடல்ஸ் வீராங்கனையான அலீஸ் கேப்ஸி வீசினார். பூஜா வஸ்த்ரேகர் மற்றும் ஹர்மன்ப்ரீத் கவுர் இருவரும் களத்தில் இருந்தனர். இதில் முதல் பந்திலேயே வஸ்த்ரேகர் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அமன்ஜோத் கவுர் 2ஆவது பந்தில் 2 ரன்கள் எடுத்தார். 3ஆவது பந்தில் ஒரு ரன் எடுத்துக் கொடுத்தார்.

இதையடுத்து 4ஆவது பந்தில் ஹர்மன்ப்ரீத் கவுர் பவுண்டரி அடித்தார். கடைசி 2 பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஹர்மன்ப்ரீத் கவுர் 5ஆவது பந்தில் ஆட்டமிழந்தார். கடைசியாக சஜீவன் சஜனா களமிறங்கினார். கடைசி பந்தில் சிக்ஸர் அடித்துக் கொடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றி பெறச் செய்தார்.

தனது அறிமுக போட்டியிலேயே முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்ததோடு மட்டுமின்றி அணியையும் வெற்றி பெறச் செய்துள்ளார். இதைப் பார்த்த ஹர்மன்ப்ரீத் கவுர் உற்சாகமாக துள்ளிக் குதித்தார். கேரளாவைச் சேர்ந்தவரான சஜீவன் சஜனா, தமிழ் சினிமாவில் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான கனா படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசனுக்கான ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் ரூ.15 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios