பிக்பேஷ் லீக்கில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் மற்றும் மெல்போர்ன் ரெனெகேட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி அடிலெய்டில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணியின் தொடக்க வீரர் ஃபிலிப் சால்ட் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். 42 பந்தில் சால்ட் 59 ரன்கள் அடித்தார். கேப்டன் அலெக்ஸ் கேரி 25 பந்தில் 42 ரன்கள் அடித்தார். 

மற்றொரு தொடக்க வீரரான ரென்ஷாவும் நன்றாக ஆடி 30 ரன்கள் அடித்தார். ஃபிலிப் சால்ட், அலெக்ஸ் கேரி, ரென்ஷாவின் அதிரடியால் 20 ஓவரில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணி 177 ரன்கள் அடித்தது.

178 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய மெல்போர்ன் ரெனெகேட்ஸ் அணியில் கேப்டன் ஃபின்ச், ஹார்வி, சாம் ஹார்ப்பர் ஆகியோர் சரியாக ஆடவில்லை. இவர்கள் அனைவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும், முகமது நபி களத்தில் நிலைத்து நின்றதுடன், அடித்தும் ஆடினார். ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசிய நபி, 41 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 71 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் நின்று மெல்போர்ன் ரெனெகேட்ஸ் அணியை வெற்றி பெற செய்தார்.

நபியின் அதிரடி பேட்டிங்கால் மெல்போர்ன் ரெனெகேட்ஸ் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.