உலக கோப்பை தொடரிலிருந்து காயம் காரணமாக விஜய் சங்கர் விலகியதை அடுத்து அவருக்கு மாற்றாக ஒரு தகுதியான வீரர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

உலக கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக ஆடிவருகிறது. முதல் 6 போட்டிகளில் தோல்வியையே தழுவாத இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிரான நேற்றைய போட்டியில் முதல் தோல்வியை தழுவியது. 

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் கையில் காயமடைந்த தவான், உலக கோப்பை தொடரிலிருந்து விலகினார். இதையடுத்து நான்காவது வரிசையில் களமிறங்கி கொண்டிருந்த ராகுல், தொடக்க வீரராக களமிறக்கப்பட்டதால் விஜய் சங்கர் நான்காம் வரிசையில் இறங்கும் வாய்ப்பை பெற்றார். 

ஆனால் அவர் அந்த வரிசைக்கு நியாயம் செய்யவில்லை. பாகிஸ்தானுக்கு எதிராக வெறும் 15 ரன்கள் மட்டுமே அடித்த விஜய் சங்கர், ஆஃப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக பெரிய இன்னிங்ஸ் ஆட வாய்ப்பு கிடைத்தும் கூட அதை தவறவிட்டார். ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக 29 ரன்களும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 14 ரன்களும் மட்டுமே எடுத்தார். 

அதனால் விஜய் சங்கரை நீக்கிவிட்டு ரிஷப் பண்ட்டை நான்காம் வரிசையில் இறக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்த நிலையில், விஜய் சங்கர் மீது நம்பிக்கை வைத்திருப்பதாக கூறிய கேப்டன் கோலி, அவருக்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்திருந்தார். ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் காலில் காயம் ஏற்பட்டிருப்பதால் அவரை நீக்குவதாக கூறி ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட்டார். 

விஜய் சங்கருக்கு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டிக்கு முன்பு பயிற்சியின் போது பும்ராவின் பந்தில் காலில் காயம் ஏற்பட்டது. ஆனால் அது சிறிய அளவிலான காயம் தான். அதன்பின்னர் வெஸ்ட் இண்டீஸ் போட்டியில் ஆடினார். காயம் ஏற்பட்டதற்கு பின்னர் அது சரியான காரணத்தால்தான் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக ஆடினார். ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் காயத்தை காரணம் காட்டி ஓரங்கட்டப்பட்டார். 

அவருக்கு பதிலாக இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ரிஷப் பண்ட் ஆடினார். இந்திய அணியில் தவான் விலகியதற்கு பிறகு தொடக்க வீரராக களமிறங்கிய ராகுல், சரியாக ஆடவில்லை. பாகிஸ்தானுக்கு எதிராக மட்டும் ஒரு அரைசதம் அடித்தார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 48 ரன்கள் அடித்தார். ஆனால் அனைத்துமே மந்தமான இன்னிங்ஸ். தவானின் இடத்தை அவரால் நிரப்ப முடியவில்லை. ராகுல் அதிரடியாக தொடங்குவதுமில்லை, மெதுவாக ஆடி களத்தில் நிலைத்த பிறகு அதை பெரிய இன்னிங்ஸாக மாற்றுவதுமில்லை.

தொடக்க வீரராக அவர் சோபிக்காவிட்டாலும், நான்காம் வரிசையில் ஓரளவிற்கு நன்றாகவே ஆடினார். ராகுல் தொடக்க வீரராக சோபிக்கவில்லை, விஜய் சங்கர் நான்காம் வரிசையில் சரியாக ஆடவில்லை. எனவே இரண்டு இடங்களுமே பிரச்னை ஆகிவிட்டன. 

இந்நிலையில், காயம் காரணமாக விஜய் சங்கர் உலக கோப்பை தொடரிலிருந்து விலகியதை அடுத்து, அவருக்கு பதிலாக மயன்க் அகர்வால் அணியில் இணைய உள்ளார். மயன்க் அகர்வால் அணியில் இணைந்தால் அவர் தொடக்க வீரராக களமிறக்கப்பட்டு, ராகுல் மீண்டும் நான்காம் வரிசையில் இறக்கப்படுவார். ரிஷப் பண்ட் இனிவரும் போட்டிகளில் ஆடும் லெவனில் இடம்பெற வாய்ப்பில்லை. 

மயன்க் அகர்வால் நல்ல தேர்வு தான். அவரால் ரோஹித்துடன் இணைந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுக்க முடியும். ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் அபாரமாக ஆடினார். மயன்க் அகர்வால் உள்நாட்டு போட்டிகளிலும் இந்தியா ஏ அணியிலும் ஆடிய நல்ல அனுபவம் கொண்ட முதிர்ச்சியான வீரர். எனவே அவர் நல்ல தேர்வு.