நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், தனது ஃபார்மை மீட்டெடுத்து சதமடிக்க, பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் அறிவுரை தான் காரணம் என்று மயன்க் அகர்வால் தெரிவித்துள்ளார். 

இந்திய டெஸ்ட் அணியில் கடந்த 2018-2019 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் அறிமுகமான மயன்க் அகர்வால், அந்த தொடரில் சிறப்பாக ஆடினார். அதன்பின்னர் இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க வீரராக உருவெடுத்துவந்தார். ஆனால் 2019ல் ரோஹித் சர்மா தொடக்க வீரராக ஆட கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி, நிரந்தர தொடக்க வீரராக உருவெடுத்தார். மற்றொரு தொடக்க வீரருக்கான இடத்திற்கு கேஎல் ராகுல் - மயன்க் அகர்வால் - ஷுப்மன் கில் ஆகியோருக்கு இடையே போட்டி நிலவுகிறது. பிரித்வி ஷாவும் இந்த வரிசையில் இருக்கிறார்.

இவர்களில் கேஎல் ராகுல் தான் இந்திய டெஸ்ட் அணியின் முதன்மை சாய்ஸ். ரோஹித் - ராகுல் ஜோடி தான் தொடக்க டெஸ்ட் கிரிக்கெட்டில் முதன்மை தொடக்க ஜோடியாக ஆடிவருகிறது. கடைசியாக 2020-2021 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் ஆடிய மயன்க் அகர்வால், அதன்பின்னர் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவிலும், இங்கிலாந்திலும் நடந்த டெஸ்ட் தொடர்களில் ஆடவில்லை. அவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.

நியூசிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில், ரோஹித் - ராகுல் ஆகிய இருவருமே ஆடாததால் தொடக்க வீரராக ஆட கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டார் மயன்க் அகர்வால். முதல் டெஸ்ட்டில் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்த மயன்க் அகர்வால், 2வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 150 ரன்களும், 2வது இன்னிங்ஸில் 62 ரன்களும் குவித்து, இந்திய அணியில் மீண்டும் தனக்கான இடத்தை பிடித்துவிட்டார். அதன்விளைவாக, தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்கான டெஸ்ட் அணியிலும் இடம்பிடித்துவிட்டார்.

இந்நிலையில், மீண்டும் ஃபார்முக்கு வந்து, தான் சிறப்பாக ஆடியதற்கு பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் அறிவுரை தான் பயன்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள மயன்க் அகர்வால், ராகுல் டிராவிட் என்னிடம் (மயன்க் அகர்வாலிடம்) சொன்னது இதுதான்: எனக்கு(டிராவிட்) தெரியும்.. நீ சமீபத்தில் பெரிய ஸ்கோர் எதுவும் அடிக்கவில்லை. உனது உணர்ச்சிகளை மட்டும் கட்டுப்படுத்து.. உனது மனதையும் எண்ணங்களையும் வலுவாக வைத்துக்கொள் என்று ராகுல் டிராவிட் அறிவுறுத்தினார். 

ராகுல் டிராவிட் எனது மனநிலையை மேம்படுத்த உதவினார். டெக்னிக்கை பொறுத்தமட்டில் டிராவிட் எனக்கு எந்த மாற்றத்தையும் பரிந்துரைக்கவில்லை. இதே டெக்னிக்கை வைத்துத்தான் இதுவரை ஸ்கோர் செய்திருக்கிறாய். எனவே அதே டெக்னிக்கையே தொடர்ந்து பின்பற்ற எனக்கு அறிவுறுத்தினார். அவர் அறிவுறுத்தியதை பின்பற்றினேன். அடுத்த இன்னிங்ஸிலேயே ரன் கிடைத்துவிட்டது என்றார் மயன்க் அகர்வால்.