இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பேட்டிங் ஆடிய ஆஸி, வீரர் மார்னஸ் லபுஷேன் கையில் காயமடைந்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பவுலிங் தேர்வு செய்துள்ளார். அதன்படி, முதலில் ஆடிய டேவிட் வார்னர் மற்றும் உஸ்மான் கவாஜா ஆகிய இருவரும் களமிறங்கினர். இதில், கவாஜா ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டில் சிராஜ் ஓவரில் விக்கெட் கீப்பரிடம் கேட்சானார். இவரைத் தொடர்ந்து மார்னஸ் லபுஷேன் களமிறங்கினார்.
அப்போது முகமது சிராஜ் பந்து வீசினார். அவரது பந்து லபுஷேனின் பெரு விரல் பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால், வலியால் துடித்த லபுஷேன் பேட்டை வீசி எறிந்தார். அதன் பிறகு மருத்துவர்கள் வந்து பரிசோதனை செய்தனர். இதையடுத்து மீண்டும் லபுஷேன் பேட்டிங் செய்தார்.
தற்போது வரையில் ஆஸ்திரேலியா 23 ஓவர்களில் 2 விக்கெட் இழந்து 73 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. இதில், டேவிட் வார்னர் 8 பவுண்டரிகள் உள்பட 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து ஸ்டீவென் ஸ்மித் இறங்கி விளையாடி வருகிறார்.
20 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப் போட்டியில் IND vs AUS, முதல் முறையாக சாம்பியன்ஸ் வெல்லப் போவது யார்?
இந்தப் போட்டி ரோகித் சர்மா மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோருக்கு 50ஆவது டெஸ்ட் போட்டியாகும். இந்தப் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் 113 ரன்கள் எடுத்தால் இந்தியாவிற்கு எதிராக 2000 ரன்களை கடப்பார். கோலி 21 ரன்கள் எடுத்தால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2000 ரன்களை கடப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
