இந்தியா - நியூசிலாந்து இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 3 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வென்றுவிட்ட நிலையில், நான்காவது போட்டி வெலிங்டனில் நடந்துவருகிறது. 

இந்த போட்டியில் இந்திய அணி மூன்று மாற்றங்களுடன் களமிறங்கியது. ரோஹித் சர்மா, ஷமி, ஜடேஜா ஆகிய மூவரும் அணியிலிருந்து நீக்கப்பட்டு முறையே சஞ்சு சாம்சன், நவ்தீப் சைனி, வாஷிங்டன் சுந்தர் ஆகிய மூவரும் அணியில் சேர்க்கப்பட்டனர். 

கேஎல் ராகுலும் சஞ்சு சாம்சனும் தொடக்க வீரர்களாக இறக்கப்பட்டனர். தொடக்க வீரராக இறங்க கிடைத்த அரிய வாய்ப்பை சஞ்சு சாம்சன் பயன்படுத்திக்கொள்ளவில்லை. இரண்டாவது ஓவரின் முதல் பந்தை சிக்ஸர் அடித்த சாம்சன், மூன்றாவது பந்தையும் சிக்ஸர் அடிக்க நினைத்து தூக்கியடித்து, ஆனால் ஷாட் சரியாக கனெக்ட் ஆகாமல் எட்ஜ் ஆனதால் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களத்திற்கு வந்த கேப்டன் கோலி 11 ரன்களிலும் ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

 

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் ராகுல் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்தார். ஆனால் அவரும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 39 ரன்களில் ராகுல் அவுட்டாக, அவரை தொடர்ந்து 12 ரன்களில் ஷிவம் துபே ஆட்டமிழந்தார். வாஷிங்டன் சுந்தர் டக் அவுட்டாக, இந்திய அணி 88 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. 

அதன்பின்னர் மனீஷ் பாண்டேவும் ஷர்துல் தாகூரும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் பெரியளவில் பவுண்டரியோ சிக்சரோ அடிக்கவில்லை. ஆனால் விக்கெட் விழுந்துவிடாமல் பார்த்துக்கொண்டதோடு நிதானமாக ஆடி ஒன்று, இரண்டாக அடித்து ஸ்கோரை உயர்த்தினர். 7வது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 43 ரன்களை சேர்த்தனர். ஷர்துல் தாகூர் 20 ரன்களிலும் சாஹல் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் களத்திற்கு வந்த நவ்தீப் சைனி, 19வது ஓவரில் 2 பவுண்டரிகள் அடித்தார். மனீஷ் பாண்டே கடைசி ஓவரில் அரைசதத்தை எட்டினார். மனீஷ் பாண்டே 36 பந்தில் அரைசதம் அடித்தார். அவரது பொறுப்பான பேட்டிங்கால் இந்திய அணி 20 ஓவரில் 165 ரன்கள் என்ற டீசண்ட்டான ஸ்கோரை அடித்தது.