இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆடிய இந்திய அணி, பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே அசத்தலாக ஆடி வெற்றியை பதிவு செய்தது. 

ராஜ்கோட்டில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவரில் 340 ரன்களை குவித்தது. 341 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணியை 304 ரன்களுக்கு சுருட்டி 36 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

முதல் போட்டியில் சதமடித்து விக்கெட் இழப்பின்றி ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்த தொடக்க வீரர்கள் வார்னர் மற்றும் ஃபின்ச் ஆகிய இருவரையும் இந்த போட்டியில் இந்திய பவுலர்கள் விரைவாகவே வீழ்த்திவிட்டனர். அவர்களை பெரிய இன்னிங்ஸ் ஆட அனுமதிக்கவில்லை. வார்னரை மனீஷ் பாண்டே அபாரமான கேட்ச்சின் மூலம் வெளியேற்றினார். 

ஷமி வீசிய நான்காவது ஓவரின் 2வது பந்தை, 30 யார்டு வட்டத்துக்குள் நின்ற ஃபீல்டரை தாண்டி தூக்கியடிக்க நினைத்தார் வார்னர். ஆனால் அதை அபாரமாக ஜம்ப் செய்து அசால்ட்டாக கேட்ச் பிடித்தார் மனீஷ் பாண்டே. இயல்பாகவே சிறந்த ஃபீல்டரான மனீஷ் பாண்டேவிற்கு இது எளிதான கேட்ச் தான். மனீஷ் பாண்டே அந்த கேட்ச்சை பிடித்ததும் சக வீரர்கள் அவரை தூக்கி கொண்டாடி தீர்த்தனர். அந்த அருமையான கேட்ச்சின் வீடியோ இதோ..