MM vs SKV, ISPL T10: முதல் போட்டியிலேயே மஜ்ஹி மும்பை வெற்றி – அக்ஷய் குமார் டீம் தோல்வி!
நேற்று தொடங்கிய இந்தியன் ஸ்டிரீட் பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டியிலேயே மஜ்ஹி மும்பை அணியானது 37 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்ரீநகர் கே வீர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்தியன் ஸ்டிரீட் பிரீமியர் லீக் தொடரின் முதல் சீசன் நேற்று தொடங்கியது. இதில், மஜ்ஹி மும்பை, சென்னை சிங்கம்ஸ், பெங்களூரு ஸ்டிரைக்கர்ஸ், ஃபால்கன் ரைசர்ஸ் ஹைதராபாத், டைகர்ஸ் ஆஃப் கொல்கத்தா மற்றும் ஸ்ரீநகர் கே வீர் என்று மொத்தமாக 6 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன. 10 ஓவர்கள் கொண்ட தொடராக நடத்தப்படும் இந்த தொடரின் முதல் போட்டியில் அமிதாப் பச்சனின் மும்பை அணியும், அக்ஷய் குமாரின் ஸ்ரீநகர் அணியும் மோதின.
இதில், டாஸ் வென்ற ஸ்ரீநகர் அணியானது முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணிக்கு கேப்டன் யோகேஷ் பென்கர் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். அவர், 26 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்ஸர் உள்பட 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க மும்பை அணி 10 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்தது.
பவுலிங்கைப் பொறுத்தவரையில் ஸ்ரீநகர் அணியில் ராஜேஷ் சோர்டே 3 விக்கெட்டுகளும், பூஷன் கோலே 2 விக்கெட்டுகளும், நவ்னீத் பாரிகர், ப்ரிடம் பாரி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர். பின்னர் வந்த ஸ்ரீநகர் அணியில் அதிகபட்சமாக லோகேஷ் மட்டுமே 27 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கவே 10 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் மட்டுமே எடுத்து 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் மும்பை அணியில் பஷ்ரத் ஹூசைன் வானி 2 ஓவர்கள் வீசி 18 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இன்று நடக்கும் போட்டியில் சூர்யாவின் சென்னை சிங்கம் அணியும், சையீப் அலி கான் மற்றும் கரீனா கபூர் கானின் டைகர்ஸ் ஆப் கொல்கத்தா அணியும் மோதுகின்றன.