ரஞ்சி டிராபி ஃபைனலில் மத்திய பிரதேச அணி மும்பைக்கு எதிராக அபாரமாக பேட்டிங் ஆடிவருகிறது. கோப்பையை வெல்வதற்கு அதிகமான வாய்ப்புள்ளது. 

உள்நாட்டு முதல் தர கிரிக்கெட் தொடரான ரஞ்சி தொடரின் ஃபைனல் மத்திய பிரதேசம் மற்றும் மும்பை அணிகள் ஆடிவருகின்றன. 

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கடந்த 22ம் தேதி தொடங்கி நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 374 ரன்களை குவித்தது. மும்பை அணியில் சர்ஃபராஸ் கான் அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தார். சர்ஃபராஸ் கான் 134 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 78 ரன்களையும் குவித்தனர்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கி ஆடிவரும் மத்திய பிரதேச அணி வீரர்கள் மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடிவருகிறார்கள். போட்டி டிரா ஆகும் பட்சத்தில் முதல் இன்னிங்ஸில் அதிக ரன்களை குவித்த அணி வெற்றி பெற்ற அணியாக அறிவிக்கப்பட்டு கோப்பை வழங்கப்படும்.

அந்தவகையில், முதல் இன்னிங்ஸ் மிக முக்கியமானது என்பதை உணர்ந்து மத்திய பிரதேச அணி அபாரமாக பேட்டிங் ஆடிவருகிறது. மத்திய பிரதேச அணியின் தொடக்க வீரர் ஹிமான்ஷு மண்ட்ரி 31 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான யஷ் துபே மற்றும் 3ம் வரிசையில் இறங்கிய ஷுபம் ஷர்மா ஆகிய இருவரும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து அபாரமாக பேட்டிங் ஆடி இருவருமே சதமடித்தனர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் மும்பை அணி திணறியது.

இதையும் படிங்க - இப்படியொரு விக்கெட்டை இதற்கு முன் பார்த்துருக்க மாட்டீங்க.! வித்தியாசமான முறையில் ஆட்டமிழந்த ஹென்ரி நிகோல்ஸ்

யஷ் துபே - ஷுபம் ஷர்மா ஜோடி 2வது விக்கெட்டுக்கு 222 ரன்களை குவித்தது. ஷுபம் ஷர்மா 116 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். யஷ் துபேவும் சதமடிக்க, அவருடன் 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரஜாத் பட்டிதரும் பொறுப்புடன் ஆடிவருகிறார். 3ம் நாள் ஆட்டத்தின் டீ பிரேக் வரை 2 விக்கெட் இழப்பிற்கு 301 ரன்களை குவித்தது மத்திய பிரதேச அணி. 

மத்திய பிரதேச அணியின் கையில் இன்னும் 8 விக்கெட் இருப்பதால், மும்பையை விட கண்டிப்பாக பெரிய ஸ்கோரை அடிக்கும்.