கௌதம் கம்பீர் ஆலோசகராக இருக்கும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி, ஐபிஎல் மெகா ஏலத்தில் பக்கா பிளானுடன் நல்ல வீரர்களை எடுத்துவருகிறது. 

ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலம் இன்றும் நாளையும் பெங்களூருவில் நடக்கிறது. இன்று பிற்பகல் 12 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவந்த ஐபிஎல் ஏலத்தில், ஏலதாரர் ஹியூக் எட்மீட்ஸ் திடீரென மயங்கி விழுந்ததால் ஒரு சிறு தடை ஏற்பட்டது. அவருக்கு உடனடியாக மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததால் அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்தது. ஆனால் அவர் ஏலத்தை தொடரமாட்டார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டது.

இந்த மெகா ஏலத்தில் சில பெரிய வீரர்களின் பெயர்களும் இருந்ததால் ஏலத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. அதேபோலவே ஏலம் மிக சுவாரஸ்யமாக இருக்கிறது.

இந்த சீசனில் புதிதாக ஆடவுள்ள லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி, ஏலத்தில் சிறந்த வீரர்களை எடுத்துவருகிறது. ஏலத்திற்கு முன்பாக கேஎல் ராகுலை ரூ.17 கோடிக்கு எடுத்து அவரை கேப்டனாக நியமித்த லக்னோ அணி, ஸ்டோய்னிஸை ரூ.9.2 கோடிக்கும், ரவி பிஷ்னோயை ரூ.4 கோடிக்கும் எடுத்தது.

ராகுல் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் - விக்கெட் கீப்பர் - கேப்டன். ஸ்டோய்னிஸ் ஆல்ரவுண்டர், ரவி பிஷ்னோய் ஸ்பின்னர். இவர்கள் மூவரையும் ஏலத்திற்கு முன் எடுத்த லக்னோ அணி, ஏலத்தில் டி காக், ஜேசன் ஹோல்டர், தீபக் ஹூடா, மனீஷ் பாண்டே ஆகியோரை எடுத்தது.

கேகேஆர் அணியின் கேப்டனாக இருந்தபோது 2 முறை ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்தவர் கௌதம் கம்பீர். ஐபிஎல்லின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவரான கௌதம் கம்பீர், ஐபிஎல் டைட்டிலை அடிக்கும் வித்தை அறிந்தவர். அந்தவகையில், அவர் ஆலோசகராக இருக்கும் லக்னோ அணி தரமான திட்டங்களுடன் ஏலத்தை அணுகுகிறது.

அணியில் ஏற்கனவே ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் இருக்கும் நிலையில், வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் ஜேசன் ஹோல்டரை ரூ.8.75 கோடிக்கு எடுத்தது. விக்கெட் கீப்பரும் இடது கை தொடக்க வீரருமான டி காக்கை ரூ.6.75 கோடிக்கும், ஃபினிஷரும் ஸ்பின் பவுலிங் வீசவல்லவருமான தீபக் ஹூடாவை ரூ.5.75 கோடிக்கு எடுத்துள்ளது. அனுபவம் வாய்ந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான மனீஷ் பாண்டேவை ரூ.4.60 கோடிக்கு எடுத்துள்ளது.

லக்னோ அணி ஒவ்வொரு பாக்ஸாக வேகமாக டிக் அடித்துவருகிறது. ராகுல் - டி காக் ஓபனிங் ஜோடி உறுதியாகிவிட்டது. விக்கெட் கீப்பர் டி காக். மிடில் ஆர்டரில் மனீஷ் பாண்டே, தீபக் ஹூடா, ஜேசன் ஹோல்டர், மார்கஸ் ஸ்டோய்னிஸ். இவர்களில் மூவர் பவுலிங்கும் வீசக்கூடிய ஆல்ரவுண்டர்கள். ஸ்பின்னர் ரவி பிஷ்னோய். இனிமேல் அந்த அணி ஃபாஸ்ட் பவுலர்கள் மீதுதான் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.