இளம் திறமைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு ஆதரவு அளிப்பதில் லட்சுமணனும் முக்கியமானவர். அந்த வகையில் தற்போது க்ருணல் பாண்டியாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் லட்சுமணன். 

மும்பை இந்தியன்ஸில் ஆடிய ஹர்திக் பாண்டியா, மூன்றுவிதமான அணிகளிலும் இடம்பிடித்து சிறந்த ஆல்ரவுண்டராக வலம்வருகிறார். கபில் தேவ், இர்ஃபான் பதானுக்கு பிறகு இந்திய அணிக்கு கிடைத்த ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் நிரந்தர இடம்பிடித்துவிட்ட நிலையில், அவரது அண்னன் க்ருணல் பாண்டியா, டி20 அணியில் மட்டுமே இடம்பிடித்துள்ளார். 

ஒருநாள் அணியில் இன்னும் க்ருணலுக்கு இடம் கிடைக்கவில்லை. க்ருணல் பாண்டியா டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டுவருகிறார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரில் கூட, மூன்று போட்டிகளிலும் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே அபாரமாக செயல்பட்டு தொடர் நாயகன் விருதையும் வென்றார். 

இரண்டாவது டி20 போட்டியில் கீமோ பால் வீசிய கடைசி ஓவரில் 3 சிக்ஸர்கள் விளாசி மிரட்டினார் க்ருணல் பாண்டியா. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்துவகையிலுமே தனது தம்பியை போலவே சிறப்பான பங்களிப்பு செய்கிறார். 

இந்நிலையில், அவரை ஒருநாள் அணியிலும் எடுக்க வேண்டும் என விவிஎஸ் லட்சுமணன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு லட்சுமணன் எழுதியுள்ள கட்டுரையில், க்ருணல் பாண்டியாவிற்கு ஒருநாள் போட்டிகளில் ஆட வாய்ப்பளிக்க வேண்டும். அவர் 6ம் வரிசை பேட்டிங்கிற்கு சரியான வீரராக இருப்பார். அதுமட்டுமல்லாமல் பவுலிங்கில் அவரது கோட்டாவான 10 ஓவர்களையும் வீசி முடிக்கக்கூடியவர் என்று லட்சுமணன் தெரிவித்துள்ளார்.