டி20 உலக கோப்பைக்கான பெஸ்ட் 11 வீரர்கள் அடங்கிய அணியை தேர்வு செய்வதற்காக பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டுவருகின்றன. கேஎல் ராகுல் கடந்த சில தொடர்களில் அபாரமாக ஆடியதுடன், டாப் ஃபார்மில் இருப்பதால் அவரைத்தான் ரோஹித் சர்மாவுடன் தொடக்க வீரராக இறக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்துள்ளன. 

ரோஹித் சர்மா -  ஷிகர் தவான் தொடக்க ஜோடி, இந்திய அணிக்காக பல சிறப்பான தொடக்கங்களை அமைத்து கொடுத்து, அணிக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக்கொடுத்த வெற்றிகரமான ஜோடி தான். ஆனால் தவான் அண்மைக்காலமாக சரியாக ஆடவில்லை. உலக கோப்பையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சதமடித்த தவான், அந்த போட்டியில் காயமடைந்ததால், உலக கோப்பையில் பாதியில் வெளியேறினார். 

அதன்பின்னர் சிகிச்சையில் இருந்த அவர், காயம் குணமடைந்து மீண்டும் அணிக்கு திரும்புவதற்குள், அதற்கிடையே தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகச்சிறப்பாக பயன்படுத்தி தனது அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி அசத்தினார் கேஎல் ராகுல். காயத்திலிருந்து மீண்டு வந்த தவான், மீண்டும் அணியில் இடம்பிடித்தாலும், அவர் சரியாக ஆடவில்லை. மந்தமாகவும் பந்துக்கு நிகராக ரன் அடித்து படுமோசமாகவும் ஆடினார். சையத் முஷ்டாக் அலி தொடரில் ஆடியபோது மீண்டும் காயமடைந்தார் தவான். ஏற்கனவே மோசமாக ஆடி, அணியில் கொஞ்சம் கொஞ்சமாக தனது இடத்தை இழந்துவந்த தவானுக்கு, இந்த காயம் பெருத்த ஆப்பாக அமைந்தது. 

Also Read - மறுபடியும் நேதன் லயனிடம் சரணடைந்த நியூசிலாந்து.. ஒயிட்வாஷ் செய்து டெஸ்ட் தொடரை வென்றது ஆஸ்திரேலிய அணி

இந்த காயத்தால் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணியில் இடம்பெற்றிருந்த தவான், நீக்கப்பட்டார். அதனால் அந்த தொடரில் ரோஹித்துடன் தொடக்க வீரராக ஆட கிடைத்த வாய்ப்பை வெகு சிறப்பாக பயன்படுத்தி அதிரடியாக ஆடி ரன்களை வாரிக்குவித்தார் கேஎல் ராகுல். அந்த தொடரில் அவரது பேட்டிங்கை கண்டு அனைத்து முன்னாள் வீரர்களுமே உலக கோப்பைக்கான டி20 அணியில் ராகுல் தான் ரோஹித்துடன் தொடக்க வீரராக இறங்க வேண்டும் என்று குரல் கொடுத்துவருகின்றனர். 

இந்நிலையில், கடந்த ஆண்டு முழுவதும் ஓய்வின்றி தொடர்ச்சியாக ஆடிவந்த ரோஹித் சர்மாவிற்கு, இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. எனவே தவானும் ராகுலும் தான் தொடக்க வீரர்களாக இறங்கவேண்டும். கவுகாத்தியில் 5ம் தேதி நடக்கவிருந்த போட்டி மழையால் ரத்தானது. 

Also Read - இவ்வளவு அப்பட்டமா பண்றீங்களேடா..? வார்னர் - லபுஷேனின் சூட்சம செயலால் செம கடுப்பான அம்பயர் அலீம் தர்.. வீடியோ

இன்னும் 2 போட்டிகள் எஞ்சியுள்ளன. இந்த போட்டிகளில் சிறப்பாக ஆடும் முனைப்பில் உள்ளார் தவான். அபாரமாக ஆடி ஃபார்முக்கு திரும்பி, மீண்டும் இந்திய அணியில் தனது இடத்தை நிரந்தரமாக்க வேண்டும் என்ற முனைப்பில் தவான் இருக்கிறார். ஆனால் இலங்கை தொடரில் அவர் எவ்வளவு ரன் அடித்தாலும், உலக கோப்பைக்கான அணியில் அவரை எடுக்க தேவையில்லை. ராகுலே தொடக்க வீரராக இறங்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனும் முன்னாள் தேர்வுக்குழு தலைவருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். 

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில் வர்ணனை செய்யும் ஸ்ரீகாந்த், அப்போது இதுகுறித்து கருத்து தெரிவித்தார். இலங்கைக்கு எதிராக அடிக்கும் ரன்களை எல்லாம் கருத்தில் கொள்ளக்கூடாது. நான் தேர்வுக்குழு தலைவராக இருந்தால், டி20 உலக கோப்பைக்கான அணியில் ராகுலைத்தான் எடுப்பேன். ராகுலுக்கும் தவானுக்கும் இடையே போட்டியே கிடையாது. அவர்கள் இருவரில் ஒருவர் தான் வின்னர். அது ராகுல் தான் என்று திட்டவட்டமாக நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல பேசினார். 

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டி மழையால் ரத்தான நிலையில், அதற்கிடையே, போட்டியை ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்காக லக்‌ஷ்மண் சிவராமகிருஷ்ணனிடம் பேசிய தவான், காயமெல்லாம் சகஜம் தான். புதிய ஆண்டை புத்துணர்ச்சியோடு எதிர்கொள்ளவிருப்பதாகவும், அணிக்காகவும் தனக்காகவும் அதிகமான ரன்களை குவிப்பதில் கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்திருந்தார். அதன்பின்னர்தான் ஸ்ரீகாந்த், இலங்கைக்கு எதிராக அடிக்கும் ரன்களை எல்லாம் கருத்தில்கொள்ளக்கூடாது. ராகுல் தான் தொடக்க வீரர் என்று தனது கருத்தை தெளிவாகவும் உறுதியாகவும் முன்வைத்தார்.