சிட்னியில் நடந்துவரும் இந்த போட்டியில், முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, லபுஷேனின் அபாரமான இரட்டை சதத்தால் 454 ரன்களை குவித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணி வெறும் 251 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

203 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் வார்னர் தொடக்கம்  முதலே அடித்து ஆட ஆரம்பித்தார். நல்ல முன்னிலை இருப்பதால் விரைவில் ஸ்கோர் செய்துவிட்டு நியூசிலாந்தை பேட்டிங் ஆடவிட வேண்டும் என்பதால், தொடக்கம் முதலே அடித்து ஆடி விரைவாக ஸ்கோர் செய்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து மறுமுனையில் இருந்த ஜோ பர்ன்ஸும் லபுஷேனும் அதிரடியாக ஆடினர். 

40 ரன்களில் பர்ன்ஸ் அவுட்டாக, அதன்பின்னர் வார்னருடன் ஜோடி சேர்ந்த லபுஷேன், 74 பந்தில் 59 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இதையடுத்து 217 ரன்களுக்கே இரண்டாவது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது ஆஸ்திரேலிய அணி. வார்னர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 159 பந்தில் 111 ரன்களை குவித்திருந்தார். மொத்தமாக 415 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலிய அணி, 416 ரன்கள் என்ற கடினமான இலக்கை நியூசிலாந்துக்கு நிர்ணயித்தது. ஆனால் நியூசிலாந்து அணி 38 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. வாட்லிங்கும் டி கிராண்ட் ஹோமும் இணைந்து ஆடிவருகின்றனர். 

ஆஸ்திரேலிய அணி, இரண்டாவது இன்னிங்ஸில் விரைவில் ரன்களை குவித்தது. அதனால் வார்னர், பந்துகளை வீணடிக்காமல், வேகமாக ஓடி சிங்கிள்களை எடுத்தார். 52வது ஓவரில் ஆஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வார்னர் - லபுஷேன் செய்த தவறால் நியூசிலாந்து அணிக்கு 5 ரன்களை வழங்கினார் அம்பயர் அலீம் தர். 

பேட்ஸ்மேன்கள் ரன் ஓடும்போது, ஆடுகளத்தில் பேட்ஸ்மேன்கள் ஓட தடை செய்யப்பட்ட பகுதிகளிலோ, நடுவிலோ அல்லது வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் ஆடுகளத்திற்கு சேதம் விளைவிக்கும் வகையிலோ ரன் ஓடக்கூடாது. ஆனால் வார்னரும் லபுஷேனும், நேதன் லயன் வழக்கமாக டார்கெட் செய்து வீசும் பகுதிகளிலேயே ஓடினர். கடைசி இன்னிங்ஸில் நேதன் லயன் வீசும் லைனில் அவருக்கு சாதகமாக இருக்கும் வகையில், அந்த இடத்தில் வேண்டுமென்றே ஓடினர். ஆடுகளத்திற்கு நடுவில் ஓடியதால் ஆஸ்திரேலிய இன்னிங்ஸின் 50வது ஓவரில் லபுஷேனுக்கு அம்பயர் அலீம் தர் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், 52வது ஓவரில் வார்னர் மீண்டும் ஆடுகளத்திற்குள் ஓடினார். அதனால் அம்பயர் அலீம் தர் நியூசிலாந்துக்கு 5 ரன்களை வழங்கினார். 

இதையடுத்து அம்பயர் அலீம் தரிடம், இதுகுறித்து அதிருப்தியுடன் கேள்வியெழுப்பினார் வார்னர். ஆனால், சொன்னால் சொன்னதுதான்.. ஓரமா போப்பா என்கிற ரீதியில், அம்பயர் அலீம் தர் மிகவும் கண்டிப்புடன் வார்னரை ஓரமாக போக சொல்லிவிட்டு, நியூசிலாந்துக்கு 5 ரன்களை வழங்கினார். நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 251 ரன்கள் அடித்திருந்த நிலையில், இந்த 5 ரன்களுடன் சேர்த்து நியூசிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 256 ரன்கள் ஆனது.