நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. பெர்த்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 296 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, மெல்போர்னில் நடந்த பாக்ஸிங் டே டெஸ்ட்டில் 247 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

முதலிரண்டு போட்டிகளிலுமே வெற்றி பெற்று 2-0 என ஆஸ்திரேலிய அணி தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் கடந்த 3ம் தேதி தொடங்கி நடந்தது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, லபுஷேனின் அபாரமான இரட்டை சதத்தால் முதல் இன்னிங்ஸில் 454 ரன்களை குவித்தது. லபுஷேன் 215 ரன்களை குவித்தார். இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணி, வெறும் 251 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து அணியின் பேட்டிங் ஆர்டரை சரித்த நேதன் லயன், 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

203 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் வார்னர் தொடக்கம்  முதலே அடித்து ஆட ஆரம்பித்தார். நல்ல முன்னிலை இருப்பதால் விரைவில் ஸ்கோர் செய்துவிட்டு நியூசிலாந்தை பேட்டிங் ஆடவிட வேண்டும் என்பதால், தொடக்கம் முதலே அடித்து ஆடி விரைவாக ஸ்கோர் செய்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து மறுமுனையில் இருந்த ஜோ பர்ன்ஸும் லபுஷேனும் அதிரடியாக ஆடினர். 

40 ரன்களில் பர்ன்ஸ் அவுட்டாக, அதன்பின்னர் வார்னருடன் ஜோடி சேர்ந்த லபுஷேன், 74 பந்தில் 59 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இதையடுத்து 217 ரன்களுக்கே இரண்டாவது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது ஆஸ்திரேலிய அணி. வார்னர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 159 பந்தில் 111 ரன்களை குவித்திருந்தார். மொத்தமாக 415 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலிய அணி, 416 ரன்கள் என்ற கடினமான இலக்கை நியூசிலாந்துக்கு நிர்ணயித்தது. 

ஆஸ்திரேலிய அணியின் இரண்டாவது இன்னிங்ஸின் போது, வார்னரும் லபுஷேனும் ஆடுகளத்தின் குறுக்கே ஓடியதால், அது விதிமீறல் என்பதால், நியூசிலாந்துக்கு 5 ரன்கள் வழங்கினார் அம்பயர் அலீம் தர். அதனால் முதல் இன்னிங்ஸில் அந்த அணி அடித்த 215-உடன் 5 ரன்கள் சேர்ந்து 256 ரன்கள் ஆனது. 

எனவே 411 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி வெறும் 38 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் களத்திற்கு வந்த காலின் டி கிராண்ட் ஹோம், அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். வெறும் 68 பந்தில் 52 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார் கிராண்ட் ஹோம். முதல் 5 விக்கெட்டுகளில் 2 விக்கெட்டை வீழ்த்தியிருந்த நேதன் லயன், அதிரடியாக ஆடிய கிராண்ட் ஹோமின் விக்கெட்டையும் வீழ்த்தினார். 

அதன்பின்னர் ஆஸ்டிலை லயன் வீழ்த்த, சோமர்வில்லியை ஸ்டார்க் வீழ்த்தினார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் ஸ்கோரே செய்யாமல் கடமைக்கு நின்று கொண்டிருந்த வாட்லிங்கை கடைசி நேதன் லயன் வீழ்த்த, கடைசி பேட்ஸ்மேனான மேட் ஹென்ரி, காயம் காரணமாக பேட்டிங் ஆடவில்லை. இதையடுத்து 136 ரன்களுக்கு நியூசிலாந்து ஆல் அவுட். ஆஸ்திரேலிய அணி 279 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய நேதன் லயன், இரண்டாவது இன்னிங்ஸிலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து 3-0 என டெஸ்ட் தொடரை வென்றது ஆஸ்திரேலிய அணி. 

அதுமட்டுமல்லாமல் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஏற்கனவே 256 புள்ளிகளை பெற்றிருந்த ஆஸ்திரேலிய அணி, இந்த வெற்றிக்கு 40 புள்ளிகளை பெற்று, மொத்தம் 296 புள்ளிகளுடன், இந்திய அணிக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்திய அணி 360 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. 

ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது ஆகிய இரண்டையுமே மார்னஸ் லபுஷேன் வென்றார். லபுஷேன் இந்த தொடரில் 6 இன்னிங்ஸில் பேட்டிங் ஆடி 549 ரன்களை குவித்தார். அவர் பேட்டிங் ஆடிய 6 இன்னிங்ஸில் ஒரு இன்னிங்ஸில் மட்டுமே அரைசதம் அடிக்கவில்லை. ஒரு இரட்டை சதம், ஒரு சதம் மற்றும் 3 அரைசதங்களை அடித்து இந்த தொடரில் அசத்தினார்.