ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ஆர்சிபி மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த போட்டியில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணியின் தொடக்க வீரர் பார்த்திவ் படேல் அதிரடியாக ஆடி 24 பந்துகளில் 43 ரன்களை குவித்தார். 81 ரன்களுக்கே ஆர்சிபி அணி 4 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், அதன்பின்னர் டிவில்லியர்ஸும் மார்கஸ் ஸ்டோய்னிஸும் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினர். கடைசி 2 ஓவர்களில் இருவரும் இணைந்து 48 ரன்களை சேர்த்தனர். இதையடுத்து 202 ரன்களுக்கு இன்னிங்ஸை முடித்தது ஆர்சிபி.

203 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் கெய்ல் ஆரம்பத்திலேயே அவுட்டானாலும் கேஎல் ராகுலும் மயன்க் அகர்வாலும் இணைந்து அபாரமாக ஆடினர். இவர்கள் இருவரின் விக்கெட்டுகளையும் ஆர்சிபி வீழ்த்திய பிறகு, மில்லர் சரியாக ஆடவில்லை. எனினும் நிகோலஸ் பூரான் அதிரடியாக ஆடி மிரட்டினார். 

ஆனால் ஆர்சிபி பவுலர்கள் 16 ஓவர்களுக்கு பிறகு பஞ்சாப் அணியின் ரன்ரேட்டை கட்டுப்படுத்த, கடைசி 2 ஓவர்களில் பஞ்சாப் அணிக்கு நெருக்கடி அதிகரித்தது. 19வது ஓவரின் கடைசி பந்தில் நிகோலஸ் பூரான் ஆட்டமிழக்க, கடைசி ஓவரில் 27 ரன்கள் தேவைப்பட்டது. எனினும் மனதை தளரவிடாமல் கடைசி ஓவரின் முதல் பந்தை சிக்ஸர் விளாசினார் பஞ்சாப் கேப்டன் அஷ்வின். 

ஆனால் இரண்டாவது பந்தில் ஆட்டமிழந்துவிட்டார். அதன்பிறகு பஞ்சாப் அணி வெறும் 3 ரன்கள் மட்டுமே எடுத்து 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. கடைசி ஓவரில் களத்திற்கு வந்த பஞ்சாப் கேப்டன் அஷ்வினின் ஆட்டத்தில் தன்னம்பிக்கை நிறைந்திருந்தது. முதல் பந்தை சிக்ஸர் அடித்த அஷ்வின், ஒவ்வொரு பந்தையுமே சிக்ஸர் அடிக்கும் முனைப்பில் இருந்தார். இன்னிங்ஸின் இடையில் அதிரடியாக ஆடி பூரான் கடுப்பேற்றியிருந்த நிலையில், கடைசியில் அஷ்வினும் சிக்சர் அடித்ததால் அதிருப்தியில் இருந்த கோலி, அஷ்வினின் கேட்ச்சை பிடித்துவிட்டு ஓவராக சீன் போட்டார். 

தோல்வி உறுதியானதால் ஏற்பட்ட கடுப்போடு சேர்த்து கோலியின் செயல்பாடும் கூடுதல் கோபத்தை ஏற்படுத்த டக் அவுட்டிற்கு சென்றதும் க்ளௌசை கழட்டி கடும் கோபத்துடன் விட்டெறிந்தார் அஷ்வின். அந்த வீடியோ இதோ.. 

வெற்றி உறுதியாகிவிட்டால் கோலியின் செயல்பாடுகளும் ஆக்ரோஷமும் சற்று அதிகமாக இருப்பதுடன் எதிரணி வீரர்களை எறிச்சலும் கடுப்பும் அடைய செய்யுமளவிற்கு இருக்கும். அதுதான் இந்த போட்டியிலும் நடந்தது.