ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனிலும் சிஎஸ்கே அணி சிறப்பாக ஆடி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 16 புள்ளிகளுடன் பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துவிட்டது. 

டெல்லி கேபிடள்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளும் கிட்டத்தட்ட பிளே ஆஃபிற்கு தகுதிபெறும் அளவில் உள்ளன. எஞ்சிய ஒரு இடத்திற்கு பஞ்சாப், கேகேஆர், சன்ரைசர்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. 

இந்த சீசனை மிகவும் வெற்றிகரமாக தொடங்கிய கேகேஆர் அணி தான். முதல் 5 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்ற கேகேஆர், அடுத்த 5 போட்டிகளிலும் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் பின் தங்கிவிட்டது. அந்த அணியின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றியவர் ஆண்ட்ரே ரசல். 

டெத் ஓவர்களில் எதிரணிகளின் பந்துவீச்சை தெறிக்கவிட்டு, சாத்தியமில்லாத விஷயங்களை கூட சாத்தியப்படுத்திவிடுகிறார். மிரட்டலான ஃபினிஷிங்கின் மூலம் எதிரணிகளை தெறிக்கவிடுகிறார். அவரை கட்டுப்படுத்த முடியாமல் எதிரணி பவுலர்கள் திணறிவருகிறார்கள். கேகேஆர் அணியில் இந்த சீசனில் இதுவரை அதிக ரன்கள் குவித்த வீரராக ரசல்தான் உள்ளார். ரசல் ஒருவர் தான் கேகேஆர் அணியின் பல வெற்றிகளுக்கு காரணமாக திகழ்ந்தார். கேகேஆர் அணி அவரை அதிகமாக சார்ந்திருக்கிறது. 

கேகேஆர் அணியின் நட்சத்திர வீரராக ஜொலிக்கும் ரசல், தொடர்ச்சியாக 6 மற்றும் 7ம் வரிசையில் இறக்கப்படுகிறார். அதனால் அவரால் சரியாக ஆடமுடியவில்லை. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மந்தமாக ஆடி ரன்ரேட்டை குறைத்துவிட்டு செல்கின்றனர். கடைசி ஓவர்களில் எவ்வளவுதான் ரசலால் போராடமுடியும்? ஒரு அளவிற்குத்தான் அவரால் டெத் ஓவர்களில் அதிரடியாக ஆடமுடியும். போட்டியே கைமீறி போனதற்கு பிறகு ரசலை இறக்கிவிடுவது நியாயமல்ல.

ரசலை சற்று முன்னதாக இறக்க வேண்டும் எனவும் ரசலை கேகேஆர் அணி சரியாக பயன்படுத்தவில்லை எனவும் விமர்சனங்கள் எழுந்தன. மாஸ்டர் பிளாஸ்டர் ஆண்ட்ரே ரசலை கேகேஆர் அணி ஏன் 7ம் வரிசையில் இறக்கியது என்பதை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. ரசலை சரியாக பயன்படுத்தி கொள்ளாமல் வேஸ்ட் ஆக்கிவிட்டனர் என்று ஆர்சிபி அணிக்கு எதிராக கேகேஆர் அணி தோற்ற பின்னர் மார்க் வாக் டுவீட் செய்திருந்தார். 

இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள கேகேஆர் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜாக் காலிஸ், சூழலுக்கு ஏற்றவாறு அணியில் முடிவெடுக்கப்படும். ஆட்டத்தின் சூழலுக்கு ஏற்பத்தான் வீரர்களை களமிறக்க முடியும். அதுமட்டுமல்லாமல் கேப்டனும் அணி நிர்வாகமும் என்ன திட்டம் வைத்திருக்கிறார்கள் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். ரசல் விரைவில் களமிறக்கப்பட வேண்டிய சூழல் இருந்தால் கண்டிப்பாக களமிறக்கப்படுவார். அது ரசலுக்கு மட்டுமல்ல; மற்ற வீரர்களுக்கும் பொருந்தும். இனிவரும் போட்டிகளில் ஒரு சில வித்தியாசமான முயற்சிகள் செய்யப்படும் என்று காலிஸ் தெரிவித்துள்ளார். 

ஆண்ட்ரே ரசலை 4ம் வரிசையில் இறக்கினால் சரியாக இருக்கும். அப்படி அவர் நான்காம் வரிசையிலோ அல்லது 5ம் வரிசையிலோ இறக்கப்பட்டால், அந்த அணி இமாலய ஸ்கோரை எட்டுவதற்கோ அல்லது குறிப்பிட்ட ஆடுகளத்தில் சராசரியாக அடிக்கப்படும் ஸ்கோரை விட கூடுதலாக அடிப்பதற்கோ வாய்ப்பிருக்கிறது.