தனது அபாரமான பேட்டிங்கின் மூலம் கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமல்லாது எதிரணி வீரர்களையும் தனது திறமைக்கு அடிமையாக்கியுள்ளார் என்று கூறினால் மிகையாகாது. அந்தளவிற்கு சமகால கிரிக்கெட்டில் அவர் கூடவும், அவருக்கு எதிராக எதிரணியிலும் ஆடும் எத்தனையோ வீரர்கள் அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது, அவரை ரோல் மாடலாக நினைக்கின்றனர். 

அப்பேர்ப்பட்ட சிறந்த வீரரான விராட் கோலி, களத்தில் தனது அதிரடியான பேட்டிங்கின் மூலம் மட்டுமல்லாமல், எதிரணி வீரர்களுக்கு அவர்கள் பாணியிலேயே பதிலடி கொடுப்பது, வம்பிழுப்பது, ஸ்லெட்ஜிங் செய்வது, ஆக்ரோஷமான கொண்டாட்டம் என பல வகையில் ரசிகர்களை எண்டர்டெய்ன் செய்வார். 

அந்தவகையில், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயித்த 208 ரன்கள் என்ற கடின இலக்கை, தனது அதிரடியான பேட்டிங்கின் மூலம் எளிதாக்கிய விராட் கோலி, 50 பந்தில் 94 ரன்களை குவித்து 19வது ஓவரிலேயே இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். 

இந்த போட்டியில் விராட் கோலியின் பேட்டிங்கில் மட்டுமல்லாமல் ஆக்ரோஷமான செயல்பாடுகளும் அனல் தெறித்தது. இன்னிங்ஸின் 13வது ஓவரில் வில்லியம்ஸ், விராட் கோலி ரன் ஓடும்போது அவரை மோதும்படியாக குறுக்கே ஓடினார். இதனால் கடுப்பான கோலி, அம்பயரிடம் முறையிட்டார். ஆனால் பந்தை பிடிப்பதற்காக மட்டுமே ஓடியதாகவும், எந்தவித உள்நோக்கத்துடனும் அப்படி ஓடவில்லை என்கிற ரீதியில், கைகளை தூக்கி சரணடைந்தார் வில்லியம்ஸ். ஆனாலும் செம கடுப்பான கோலி, தனது கோபத்தை பார்வையின் மூலம் வெளிப்படுத்தினார். 

பின்னர் அரைசதம் அடித்ததும், ஆக்ரோஷமாக அதை கொண்டாடிய கோலி, வழக்கம்போல தனது ஜெர்சி நம்பரை காட்டி கொண்டாடினார். பின்னர், தன்னை சீண்டிய வில்லியம்ஸ் வீசிய 16வது ஓவரில் சிக்ஸர் விளாசிவிட்டு, வில்லியம்ஸின் ஐகானிக் கொண்டாட்டத்தை செய்து காட்டி கிண்டலடித்தார். விராட் கோலியின் செய்கையால் வில்லியம்ஸின் முகம் சுண்டியது. 

18வது ஓவரை வீசிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்டு, அந்த ஓவரில் ஒரு பந்தை வீச ஓடிவந்து வீசாமல் ஏமாற்றிவிட்டு சென்றார். இந்த மாதிரி உத்தியெல்லாம் வேறு எந்த வீரரிடமாவது காட்டினால் கூட செல்லுபடியாகும். ஆனால் கோலியிடம் இதெல்லாம் கொஞ்சம் கூட செல்லாது என்பதை உணராமல் இதுபோன்று செய்தார் பொல்லார்டு. ஏனெனில் கோலியை கடுப்பேற்ற கடுப்பேற்ற அது எதிரணிக்கு பாதகமாகவே அமையும். இதை உணர்ந்தவர்கள் கோலியை கடுப்பேற்ற மாட்டார்கள். பொல்லார்டு பந்துவீசாமல் சென்றதும், கள நடுவரிடம், நேரத்தை வீணடித்துக்கொண்டிருக்கிறார் பொல்லார்டு என்று சைகையின் மூலம் புகாரளித்தார். 

அதன்பின்னர் பொல்லார்டு வீசிய பந்தை சிக்ஸருக்கு அனுப்பி மிரட்டினார். சிக்ஸர் அடித்துவிட்டு பொல்லார்டை பார்த்து முறைக்கவும் செய்தார் கோலி. இப்படியாக போட்டி முழுவதுமே பல தரமான சம்பவங்கள் நடந்தது. பேட்டிங்கில் மட்டுமல்லாது, எதிரணி வீரர்களை ஸ்லெட்ஜிங்கின் மூலமும் தெறிக்கவிட்டார் கோலி. ஆனால் இவையெல்லாமே ஆட்டத்தின் ஒரு அங்கம் தானே தவிர, போட்டி முடிந்து எதிரணி வீரர்களுடன் கை குலுக்குவதுடன் அனைத்தும் முடிந்துவிடும் என்றார் கோலி. 

அதையே தான் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்டும் தெரிவித்தார். கோலியின் ஆக்ரோஷமான அணுகுமுறை குறித்து பேசிய பொல்லார்டு, கோலி மிகுந்த ஆர்வமும் கிளர்ச்சியும் உடைய ஆக்ரோஷமான வீரர். மிகச்சிறந்த பேட்ஸ்மேன். அவர் உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன் என்பதை மீண்டும் மீண்டும் இந்த உலகிற்கு நிரூபித்துக்கொண்டே இருக்கிறார். களத்தில் அவரது ஆக்ரோஷமான செயல்பாடுகளையெல்லாம், அவர் ஸ்கோர் செய்வதற்கு சுய ஊக்குவிப்பாகத்தான் நான் பார்க்கிறேன். அது எல்லாமே அந்த போட்டி முடியும் வரைதான் என்று பொல்லார்டு தெரிவித்துள்ளார்.