2015 உலக கோப்பையில் அரையிறுதி வரை சென்ற தென்னாப்பிரிக்க அணி, 2019 உலக கோப்பையில் படுமோசமாக ஆடியது. டிவில்லியர்ஸ் இல்லாததன் விளைவு தென்னாப்பிரிக்காவின் ஆட்டத்தில் தெரிந்தது. 

டுப்ளெசிஸ் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி, உலக கோப்பையில் படுமோசமாக சொதப்பி, லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் 7ம் இடத்தை பிடித்து மோசமாக வெளியேறியது. உலக கோப்பை தோல்வியை அடுத்து அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஓட்டிஸ் கிப்சன் உட்பட பயிற்சியாளர் குழுவில் உள்ள அனைவரையும் நீக்கிவிட்டு புதிய பயிற்சியாளர்களை நியமிக்கவுள்ளது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம். 

இந்நிலையில், தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் மார்க் பவுச்சர் தான் தலைமை பயிற்சியாளர் பொறுப்பிற்கு சரியான நபர் என கெவின் பீட்டர்சன் கருத்து தெரிவித்துள்ளார். 

தென்னாப்பிரிக்காவில் பிறந்து, ஆனால் இங்கிலாந்து அணிக்காக ஆடியவர் கெவின் பீட்டர்சன். இங்கிலாந்து அணியின் கேப்டனாகக்கூட இருந்துள்ளார். அவர் தனது கருத்தை டுவீட் செய்துள்ளார். அதில், ஒரே ஒரு நபரால் மட்டுமே தென்னாப்பிரிக்க அணியை தூக்கி நிறுத்தமுடியும். அவர்தான் மார்க் பவுச்சர். அவர் நிறைய டிராபிகளை வென்றிருப்பதோடு, உலகம் முழுவதும் மதிக்கப்படக்கூடிய வீரராக திகழ்கிறார். அவர் மிகச்சிறந்த மனிதரும் கூட என்று கெவின் பீட்டர்சன் பதிவிட்டுள்ளார்.