இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக மீண்டும் ரவி சாஸ்திரியே தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவின் பதவிக்காலம் வெஸ்ட் இண்டீஸ் தொடருடன் முடிவடைகிறது. இதையடுத்து பயிற்சியாளர் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

தலைமை பயிற்சியாளர் பதவிக்கு 2000 விண்ணப்பங்கள் வந்தன. அதில் டாம் மூடி, மைக் ஹெசன், ஃபில் சிம்மன்ஸ், ராபின் சிங், ரவி சாஸ்திரி உட்பட 6 பேர் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டனர். இவர்களில் ஃபில் சிம்மன்ஸ், இந்த போட்டியிலிருந்து விலகினார். இதையடுத்து எஞ்சிய 5 பேரிடமும் இன்று நேர்காணல் நடத்தப்பட்டது.

பின்னர், மாலை 6.15 மணிக்கு கபில் தேவ் தலைமையிலான கிரிக்கெட் ஆலோசனை குழு செய்தியாளர்களை சந்தித்தது. அப்போது பேசிய கபில் தேவ், ரவி சாஸ்திரியே இன்னும் 2 ஆண்டுகளுக்கு தலைமை பயிற்சியாளராக நீடிப்பார் என அறிவித்தார். 

இதையடுத்து, கேப்டன் கோலியின் கருத்தை ஏற்று இந்த நியமனம் செய்யப்பட்டதா என்றும் 2015 மற்றும் 2019 ஆகிய 2 உலக கோப்பைகளிலும் சாஸ்திரியின் பயிற்சியின் கீழ் இந்திய அணி அரையிறுதியில் தோற்று வெளியேறியதே என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதிலளித்த கபில் தேவ், கோலியின் கருத்தையெல்லாம் கேட்கவே இல்லை. அப்படி கோலியின் கருத்தை கேட்க வேண்டுமெனில், அனைத்து வீரர்களின் கருத்தையும் கேட்க வேண்டும். நாங்கள் யாரையும் கேட்கவும் இல்லை. அதற்கு இங்கு இடமுமில்லை.

 

உலக கோப்பையை வெல்லவில்லை என்பதற்காக பயிற்சியாளரை நீக்கத்தான் வேண்டுமா அல்லது நீக்கத்தான் முடியுமா? சாஸ்திரி, விஷயங்களை எப்படி தொகுத்தளித்தார் என்பதன் அடிப்படையில் தான் அவரை தேர்வு செய்தோம். நேர்காணல் செய்த அனைவருமே சிறந்தவர்கள் தான். போட்டி கடுமையாக இருந்தது. ஆனால் ரவி சாஸ்திரியின் தொகுத்தளித்த விதமும் அவரது கம்யூனிகேஷன் ஸ்கில்லும் சிறப்பாக இருந்தது. அதனால்தான் அவரை தேர்வு செய்தோம் என்று கபில் தேவ் தெரிவித்தார்.