Asianet News TamilAsianet News Tamil

தம்பி ரிஷப் பண்ட் நீ ரோஹித் மாதிரி தான் பண்ற.. இதை மட்டும் செய்; நீ மாஸ் தான்.! ரிஷப்புக்கு கபில் தேவ் அட்வைஸ்

இங்கிலாந்தில் எப்படி ஆடவேண்டும் என்று ரிஷப் பண்ட்டுக்கு கபில் தேவ் அறிவுரை கூறியுள்ளார்.
 

kapil dev advise to rishabh pant that how to bat in england
Author
Chennai, First Published May 26, 2021, 10:00 PM IST

3 விதமான போட்டிகளிலும் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனாக உருவெடுத்துள்ள ரிஷப் பண்ட்டின் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் ஆகிய இரண்டுமே, அவர் அறிமுகமான புதிதில் இருந்ததற்கு, இப்போது அதிகளவில் மேம்பட்டிருக்கிறது.

இந்திய அணியில் அறிமுகமான புதிதில், சிறப்பாக ஆடினாலும், அனைத்து பந்துகளையும் அடித்து ஆட முயன்று வீணாக விக்கெட்டை பறிகொடுத்த ரிஷப் பண்ட், இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். அந்த புறக்கணிப்பு அவருக்கு நிறைய கற்றுக்கொடுத்திருக்கிறது. 

இப்போது அதிரடியாக ஆடினாலும், அனைத்து பந்துகளையும் அடித்து ஆட முயல்வதில்லை. ஆஸி., சுற்றுப்பயணத்தில் அபாரமாக ஆடி, தனிநபராக இந்திய அணிக்கு போட்டிகளை வென்றுகொடுத்தார். இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவில் அபாரமாக ஆடினார்.

இங்கிலாந்தில் நடக்கும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஆகியவற்றில் இந்திய அணிக்காக ரிஷப் பண்ட் ஆடவுள்ளார். டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணம் ஆகிய இரண்டுமே மிக முக்கியமான போட்டிகள்.

ரிஷப் பண்ட்டின் பேட்டிங் முன்பைவிட தற்போது முதிர்ச்சியடைந்திருக்கிறது என்றாலும், இங்கிலாந்தில் எப்படி ஆடவேண்டும் என்ற ஆலோசனையை வழங்கியுள்ளார் கபில் தேவ்.

ரிஷப் பண்ட் குறித்து பேசிய கபில் தேவ், ரிஷப் பண்ட் வந்த புதிதில் இருந்ததைவிட இப்போது முதிர்ச்சியடைந்திருக்கிறார். அவருக்கு ஷாட்டுகள் ஆட நிறைய நேரம் கிடைக்கிறது. அபாரமான ஷாட்டுகளை ஆடுகிறார். ஆனால் இங்கிலாந்து கண்டிஷன் சவாலானது. அவர் மிடில் ஆர்டரில் நிலைத்து நின்று ஆடவேண்டும். அனைத்து பந்துகளையும் அடித்து ஆட முயற்சிக்கக்கூடாது. ரோஹித் சர்மாவை பற்றியும் இதையே பேசியிருக்கிறோம். ரோஹித் நிறைய ஷாட்டுகளை வைத்திருக்கும் வீரர். ஆனால் அடித்து ஆட முயற்சித்து அவுட்டாகிவிடுவார்.

ரிஷப் பண்ட்டும் அப்படித்தான். அருமையான வீரர். இங்கிலாந்து கண்டிஷன் வித்தியாசமானது; சவாலானது. எனவே அனைத்து பந்துகளையும் அடித்து ஆட முயற்சி செய்யாமல் நிலைத்து நின்று ஆட வேண்டும் என்று கபில் தேவ் அறிவுரை கூறியுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios