இந்தியா - ஆஸ்திரேலியா ஒருங்கிணைந்த டெஸ்ட் லெவனை தேர்வு செய்துள்ளார்.

இந்திய அணி இந்த ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. இந்தியாவின் இந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த 2018ல் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சென்றபோது, டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்றில் முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது இந்திய அணி. கடந்த தொடரில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகிய இருவரும் ஆடாத நிலையில், இந்த முறை அவர்கள் ஆடுவார்கள். இரு அணிகளும் சமபலத்துடன் திகழ்வதால் போட்டி கடுமையாக இருக்கும். இந்த தொடர் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது.  

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் ஃபாஸ்ட் பவுலர் ஜோஷ் ஹேசில்வுட், இந்தியா - ஆஸ்திரேலியா ஒருங்கிணைந்த டெஸ்ட் லெவனை தேர்வு செய்துள்ளார். 

அதன்படி, மயன்க் அகர்வால் மற்றும் டேவிட் வார்னர் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார். 3ம் வரிசையில் ஸ்டீவ் ஸ்மித், 4ம் வரிசையில் விராட் கோலி, 5ம் வரிசையில் புஜாரா ஆகியோரையும் ஆறாம் வரிசையில் வளர்ந்துவரும் தலைசிறந்த வீரரான மார்னஸ் லபுஷேன் அல்லது ரோஹித் சர்மா ஆகிய இருவரில் ஒருவரை தேர்வு செய்துள்ளார். இருவருமே ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடிய பேட்டிங் ஆடக்கூடியவர்கள் என்று ஹேசில்வுட் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஆடுவதாக இருந்தால் என்னுடைய ஸ்பின்னர் அஷ்வின்; மற்ற நாடுகளில் ஆடுவதற்கு நேதன் லயன் என ஹேசில்வுட் தெரிவித்துள்ளார். ஃபாஸ்ட் பவுலர்களாக பாட் கம்மின்ஸ், பும்ராவுடன் தன்னையும் இணைத்து கொண்டுள்ளார்.

ஜோஷ் ஹேசில்வுட்டின் இந்தியா - ஆஸ்திரேலியா ஒருங்கிணைந்த டெஸ்ட் லெவன்:

மயன்க் அகர்வால், டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலி, புஜாரா, ரோஹித் சர்மா/மார்னஸ் லபுஷேன், நேதன் லயன்/ரவிச்சந்திரன் அஷ்வின், பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட், பும்ரா.