இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி சவுத்தாம்ப்டனில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்பிற்கு 583 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணி 273 ரன்களுக்கே சுருண்டது. 

பாகிஸ்தான் அணியில் கேப்டன் அசார் அலி மட்டுமே சிறப்பாக ஆடி 141 ரன்களை குவித்தார். மற்ற அனைத்து வீரர்களுமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 11 ஆண்டுகளுக்கு பிறகு, இங்கிலாந்துக்கு எதிரான கடந்த 2வது டெஸ்ட்டில் ஃபவாத் ஆலமுக்கு பாகிஸ்தான் அணியில் கம்பேக் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் 11 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த கம்பேக் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளாமல் நான்கே பந்தில் டக் அவுட்டானார்.  

ஆனால் இந்த போட்டியில் அவருக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது. 70 பந்துகளுக்கு மேல் பேட்டிங் ஆடி களத்தில் நிலைத்துவிட்ட ஃபவாத் ஆலம் 21 ரன்னில் டோமினிக் பெஸ்ஸின் சுழலில் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லரிடம் கேட்ச் கொடுத்து ஃபவாத் ஆலம் ஆட்டமிழந்தார். 

அந்த கேட்ச் தற்போது சர்ச்சையாகியுள்ளது. ஐசிசி விதி 27.3ன் படி, விக்கெட் கீப்பர் ஸ்டம்புக்கு பின்னால் தான் நிற்க வேண்டும்; ஸ்டம்பை கடந்த பிறகுதான் பந்தை பிடிக்கவும் வேண்டும். ஸ்டம்புக்கு முன்னால் கை வந்தால் நோ பால்.

ஆனால் ஃபவாத் ஆலம் கேட்ச்சை பிடித்த அந்த குறிப்பிட்ட பந்தின்போது, பட்லரின் கை ஸ்டம்புக்கு முன்னால் இருந்துள்ளது. அந்த புகைப்படம் தற்போது வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஃபவாத் ஆலமுக்கு பட்லர் பிடித்தது மிக அருமையான கேட்ச். ஆனால் அவரது க்ளௌஸ் ஸ்டம்புக்கு முன்னால் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் அது நோ பாலாக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டியது. 

பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸின் 37வது ஓவரில் டோமினிக் பெஸ்ஸின் பந்தில் ஃபவாத் ஆலமின் கேட்ச்சை பட்லர் பிடித்தார். ஒருவேளை அது நோ பாலாக அறிவிக்கப்பட்டிருந்தால் ஃபவாத் ஆலம் தப்பியிருப்பார். 11 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் மீண்டும் ஆட வாய்ப்பு கிடைத்தும், கடந்த போட்டியில் டக் அவுட்டானார். இந்த போட்டியில் அவரது விதி மோசமாக அமைந்துவிட்டது.