நடப்பு உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு சிறப்பானதாக அமைந்துள்ளது. பாகிஸ்தான், வங்கதேச அணிகளுக்கு ஓரளவிற்கு பரவாயில்லை. பெரிய அணிகளில் தென்னாப்பிரிக்காவுக்கும் வெஸ்ட் இண்டீஸுக்கும் தான் படுமோசமான தொடராக அமைந்துள்ளது. 

தென்னாப்பிரிக்க அணி இந்த உலக கோப்பை தொடரில் படுமோசமாக ஆடியுள்ளது. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்து வகையிலும் சொதப்பியது. முதல் போட்டியில் இங்கிலாந்திடம் தோற்ற தென்னாப்பிரிக்க அணிக்கு அதன்பின்னர் ஒரே தோல்விமயம்தான். இதுவரை 8 போட்டிகளில் ஆடி ஆஃப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளை மட்டுமே வீழ்த்தியது. 

உலக கோப்பை தொடங்குவதற்கு சரியாக ஓராண்டுக்கு முன்னதாக அந்த அணியின் நட்சத்திர வீரர் டிவில்லியர்ஸ் ஓய்வு பெற்றார். உலக கோப்பை தொடங்கும் சமயத்தில் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலர் ஸ்டெய்ன் உடற்தகுதியுடன் இல்லாமல் போனது பெரிய அடியாக இருந்தது. டிவில்லியர்ஸ், ஸ்டெய்ன் ஆகியோர் இல்லாததன் பாதிப்பு நன்றாக தெரிந்தது. 

கடந்த உலக கோப்பை தொடரில் அரையிறுதி வரை சென்ற தென்னாப்பிரிக்க அணி, இந்த முறை படுமோசமாக ஆடியது. டிவில்லியர்ஸ் இல்லாததன் இழப்பு, மிடில் ஆர்டரின் சொதப்பலான பேட்டிங் மூலம் தெரியவந்தது. ஆஃப்கானிஸ்தானுக்கு அடுத்தபடியாக உலக கோப்பை அரையிறுதி வாய்ப்பை இழந்த அணி தென்னாப்பிரிக்கா தான். 

இந்நிலையில், தென்னாப்பிரிக்க அணி உலக கோப்பையில் சொதப்பியதற்கான காரணத்தை முன்னாள் ஜாம்பவான் ஜாண்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள ஜாண்டி ரோட்ஸ், உலக கோப்பை போன்ற பெரிய தொடரில் 40-60 ரன்கள் அடித்துவிட்டால் அதை பெரிய சதமாக மாற்ற வேண்டும். ஆனால் அதை செய்ய தென்னாப்பிரிக்க வீரர்கள் தவறிவிட்டனர். தென்னாப்பிரிக்க அணியிடம் உண்மையாகவே “ப்ளான் பி”(மாற்று திட்டம்) இல்லவே இல்லை. தென்னாப்பிரிக்க அணியின் ப்ளான் ஏ என்னவென்றால் வேகமாக பவுலிங் செய்வது. ஆனால் இங்கிலாந்தில் இரண்டு விதமான கோடைகாலம் நிலவுகிறது. 

ஒன்று குளிர்ந்த மற்றும் ஸ்விங் கண்டிஷன், மற்றொன்று நல்ல ஹாட்டான ஃப்ளாட் கண்டிஷன். வேகமாக பந்துவீசுவது என்ற ஒரே திட்டத்துடன் தான் தென்னாப்பிரிக்க அணி இருந்தது. நம்மிடம் நல்ல வீரர்கள் இருக்கின்றனர். ஆனால் நல்ல ஆடுகளங்களில் ஷார்ட் பிட்ச் பந்துகளை கவனமாக ஆடவில்லை என்று ஜாண்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் டிவில்லியர்ஸ் ஓய்வு பெற்றுவிட்டதால் ஓராண்டாக அணியில் ஆடாத நிலையில், அவரை மீண்டும் அணியில் எடுக்க முடியாது. ஆனாலும் அவர் இந்த உலக கோப்பையில் ஆடாதது குறித்த அதிருப்தியையும் வெளிப்படுத்தினார் ஜாண்டி ரோட்ஸ்.