இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் தொடர் முடிந்துவிட்டது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வென்றதால் 2-2 என தொடர் சமனடைந்தது. 

லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் 135 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவை தொடரை கைப்பற்றவிடாமல் தடுத்து சமன் செய்தது. ஆனாலும் ஆஷஸ் கோப்பை ஏற்கனவே ஆஸ்திரேலியாவிடம் இருப்பதால், இந்த தொடர் டிரா ஆனதால் கோப்பை அந்த அணியிடமே இருக்கும்.

இந்த தொடரில் ஸ்டீவ் ஸ்மித்தின் ஆட்டம் தான் அபாரம். ஆர்ச்சர், பாட் கம்மின்ஸ், பென் ஸ்டோக்ஸ் ஆகியோரும் அபாரமாக ஆடினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வார்னர், பட்லர், பேர்ஸ்டோ ஆகியோர் சரியாக ஆடவில்லை. 

ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரரான ஸ்மித்தை கடைசி டெஸ்ட் போட்டியில் இரண்டு முறை பயங்கரமாக ஏமாற்றினார் பேர்ஸ்டோ. ஸ்மித் பேட்டிங் ஆடியபோது, ஆர்ச்சர் வீசிய பந்தை அடித்துவிட்டு ஸ்மித்தும் வேடும் இரண்டு ரன்கள் ஓடினர். 

ஸ்மித் ஸ்ட்ரைக்கர் முனையை நோக்கி இரண்டாவது ரன்னை ஓடிக்கொண்டிருந்தபோது, பந்து தன்னிடம் நெருங்கிவிட்டதை போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி ஸ்மித்திற்கு பதற்றத்தை அளித்தார் விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோ. ஆனால் உண்மையில், பந்து அவரிடம் வரவில்லை. தாமதமாகவே அந்த த்ரோ விடப்பட்டது. அதுமட்டுமல்லாமல், அந்த த்ரோவை பவுலர் ஆர்ச்சரே பிடித்துவிட்டார். ஆனால் பேர்ஸ்டோ பந்தை பிடித்து ஸ்டம்பை அடிப்பதற்கு தயாராகிவிட்டது போன்ற தோற்றத்தை உருவாக்கியதால், ஸ்மித் பயந்துபோய் தனது விக்கெட்டை காப்பாற்றுவதற்காக தாவிக்குதித்து கீழே விழுந்தார். பின்னர்தான் பேர்ஸ்டோவிடம் பந்து வரவேயில்லை என்பதை உணர்ந்தார். 

களத்தில் வீரர்களின் கவனத்தை சிதறடிக்கும் வகையில் செயல்களிலோ ஏமாற்றவோ கூடாது என்பது ஐசிசியின் விதி. பேர்ஸ்டோவின் இந்த செயல் ஏமாற்று வேலை இல்லையா என்று பல முன்னாள் வீரர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

விக்கெட் கீப்பிங்கின் போது ஸ்மித்துக்கு பல்பு கொடுத்த பேர்ஸ்டோ, தனது பேட்டிங்கின்போதும் அவரை ஏமாற்றினார். இங்கிலாந்து அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் பேர்ஸ்டோ பேட்டிங் ஆட வந்ததும் நாதன் லயன் அந்த ஓவரை வீசினார். அப்போது தான் களத்திற்கு வந்த பேர்ஸ்டோ ரன்னே அடிக்காமல் களத்தில் நின்றார். லயன் வீசிய பந்தை ஸ்வீப் ஆடப்போவது போல் செய்கை செய்த பேர்ஸ்டோ, கடைசி நேரத்தில் தனது முடிவை மாற்றிக்கொண்டு, ஆஃப்திசையில் அடித்துவிட்டார். அதை சற்றும் எதிர்பாராத ஸ்மித், அந்த பந்தை பிடிக்காமல் விட்டார். பேர்ஸ்டோ லெக் திசையில்தான் அடிக்கப்போகிறார் என்று ஸ்மித் அசால்ட்டாக நின்றார். ஆனால் பேர்ஸ்டோ திடீரென தேர்டுமேன் திசையில் தட்டிவிட்டதால், அதை சற்றும் எதிர்பார்த்திராத ஸ்மித் பந்தை விட்டார். அதற்கு இரண்டு ரன்கள் எடுக்கப்பட்டது. உடனடியாக ஸ்மித் தனது தவறுக்கு பவுலர் லயனிடம் மன்னிப்பு கேட்டார். அந்த வீடியோ இதோ..