இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணியில் ஜோப்ரா ஆர்ச்சர் களமிறங்குகிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.

Jofra Archer likely Play 2nd Test Against England: இந்தியா, இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 471 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (101 ரன்), கேப்டன் சுப்மன் கில் (147 ரன்) மற்றும் ரிஷப் பண்ட் (134) ஆகிய 3 பேர் சூப்பர் சதம் விளாசினார்கள். இங்கிலாந்து தரப்பில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ஜோஷ் டாங்கே தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

இந்தியா-இங்கிலாந்து முதல் டெஸ்ட்

பின்பு தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 2வது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணி வீரர் ஆலி போப் சூப்பர் சதம் (100 ரன்கள்) விளாசி களத்தில் உள்ளார். பென் டக்கெட் அரை சதம் (63 ரன்) அடித்தார். இங்கிலாந்து அணி 262 ரன்கள் பின்தங்கியு நிலையில், இன்று 3வது நாள் பேட்டிங் செய்கிறது.

இங்கிலாந்து அணிக்கு திரும்பும் ஜோப்ரா ஆர்ச்சர்

இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய பலமாக அந்த அணியின் முக்கியமான பாஸ்ட் பவுலர் ஜோப்ரா ஆர்ச்சர் ஜூலை 2ம் தேதி தொடங்கும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்டில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 30 வயதான ஆர்ச்சர் டர்ஹாமுக்கு எதிரான வரவிருக்கும் போட்டிக்கான இங்கிலீஷ் கவுண்டி அணியான சசெக்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளார்.

சசெக்ஸ் அணிக்காக விளையாடும் ஆர்ச்சர்

ஆர்ச்சர் கடைசியாக மே 2021 இல் சசெக்ஸ் அணிக்காக விளையாடிய நிலையில், இப்போது மீண்டும் விளையாட இருக்கிறார். அடிக்கடி காயத்தில் சிக்கிய ஜோப்ரா ஆர்ச்சர், இங்கிலாந்து அணிக்காக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடினார். அதன்பிறகு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். நீண்ட காலம் டெஸ்ட் போட்டிகளில் விளையாடாமல் இருந்த அவர் சசெக்ஸ் அணிக்காக களமிறங்குகிறார்.

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கவனிப்பு

சசெக்ஸ் அணிக்காக சிறப்பாக செயல்பட்டு தனது உடல்தகுதியை நிரூபித்தால் இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் ஜோப்ரா ஆர்ச்சர் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது. இதனால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அவரது நிலையை தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வருகிறது. குறிப்பாக இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் கவுண்டி கிரிக்கெட்டில் ஆர்ச்சரின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனிக்க உள்ளனர்.

இங்கிலாந்து பாஸ்ட் பவுலர்கள் மோசம்

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் ஜோப்ரா ஆர்ச்சர் களமிறங்கினால் அது இங்கிலாந்து அணிக்கு பெரும் பலமாக இருக்கும். ஏனெனில் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து பாஸ்ட் பவுலர்கள் எதிர்பார்த்த அளவு பந்துவீசவில்லை. அந்த அணியின் மெயின் பாஸ்ட் பவுலரான கிறிஸ் வோக்ஸ் 24 ஓவர்களில் 104 ரன்களை விட்டுக் கொடுத்தாரே தவிர ஒரு விக்கெட்டும் வீழ்த்தவில்லை. இதேபோல் பிரைடன் கார்சும் 22 ஓவர்களில் 96 ரன் கொடுத்து 1 விக்கெட் மட்டுமே வீழ்த்தினார்.

தவறான திசையில் பந்துவீசினார்கள்

இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதேபோல் ஜோஷ் டாங்கேயும் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். ஸ்டோக்ஸ் தவிர மற்ற பாஸ்ட் பவுலர்கள் சரியான லைன் அன்ட் லெந்த்தில் பந்து வீசவில்லை. உள்ளூர் ஆடுகளத்தின் தன்மை அறிந்தும் இங்கிலாந்து பவுலர்கள் தவறான திசையில் பந்து வீசியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதனால் தான் ஜோப்ரா ஆர்ச்சரின் வருகையை இங்கிலாந்து அணியினர் மட்டுமின்றி இங்கிலாந்து வீரர்கள் எதிர்பார்த்துள்ளனர்.