- Home
- Sports
- Sports Cricket
- தனி ஆளாக போராடும் பும்ரா! மற்ற பவுலர்கள் சொதப்பல்! போப் சதத்தால் இங்கிலாந்து வலுவான தொடக்கம்!
தனி ஆளாக போராடும் பும்ரா! மற்ற பவுலர்கள் சொதப்பல்! போப் சதத்தால் இங்கிலாந்து வலுவான தொடக்கம்!
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 2வது நாளில் இங்கிலாந்து அணி வலுவான தொடக்கம் கண்டுள்ளது. பும்ரா மட்டும் தனி ஆளாக போராடி 3 விக்கெட் வீழ்த்தினார்.

India vs England 1st Test! England Strong Start Jasprit Bumrah takes 3 wickets
இந்தியா, இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 113 ஓவர்களில் 471 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (101 ரன்), கேப்டன் சுப்மன் கில் (147 ரன்) மற்றும் ரிஷப் பண்ட் (134) ஆகிய 3 பேர் சூப்பர் சதம் விளாசினார்கள்.
இந்திய அணி 471 ரன்னுக்கு ஆல் அவுட்
இந்திய அணியில் அறிமுக வீரராக களமிறங்கிய சாய் சுதர்சனும், 8 ஆண்டுகளுக்கு பிறகு அணியில் இடம்பிடித்த கருண் நாயரும் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தனர். இதேபோல் ரவீந்திர ஜடேஜாவும் (11) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். ஒரு கட்டத்தில் 430/4 என நல்ல நிலையில் இருந்த இந்திய அணி கடைசி 41 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை தாரை வார்த்தது. இங்கிலாந்து தரப்பில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகளையும், ஜோஷ் டாங்கே விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.
பும்ரா அசத்தல் பந்துவீச்சு
இந்திய அணி ஆல் அவுட் ஆனதும் சிறிது தூரல் விழுந்ததால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு மழை நின்றவுடன் ஆட்டம் தொடங்கியது. இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸ் பேட்டிங் தொடங்கிய நிலையில், பென் டக்கெட், ஜாக் கிரோவ்லி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினார்கள். முதல் ஓவரை வீசிய உலகின் நம்பர் 1 பவுலர் ஜஸ்பிரித் பும்ரா தனது அபார பந்துவீச்சின் மூலம் ஜாக் கிரோவ்லியை வெறும் 4 ரன்களுக்கு வெளியேற்றினார். கிரோவ்லி பும்ரா பந்தில் கருண் நாயரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
பென் டக்கெட் அதிரடி
முதல் ஓவரிலேயே விக்கெட் விழுந்ததால் வரிசையாக விக்கெட் வீழ்த்தி விடலாம் என இந்திய வீரர்கள் நினைத்தனர். ஆனால் தொடக்க வீரர் பென் டக்கெட்டும், பின்பு களமிறங்கிய ஓலி போப்பும் இந்திய பவுலர்களின் நினைப்பை தவிடுபொடியாக்கும் வகையில் 'பேஸ்பால்' எனப்படும் அதிரடி ஆட்ட பாணியை கையில் எடுத்தனர். இந்திய அணியில் பும்ரா சரியான லைன் அண்ட் லெந்த்தில் பந்துவீசி நெருக்கடி கொடுத்த நிலையில், மற்ற பவுலர்களான முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா சொதப்பினார்கள்.
கேட்ச்களை தவற விட்ட ஜெய்ஸ்வால், ஜடேஜா
இதனால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ரன்கள் குவித்தனர். தடுமாற்றத்துடன் ஆடிய பென் டக்கெட் பும்ரா பந்தில் 2 கண்டத்தில் இருந்து தப்பினார். அவர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ரவீந்திர ஜடேஜா, ஜெய்ஸ்வால் ஆகியோர் கோட்டை விட்டனர்.ஓரளவு சிறப்பாக விளையாடிய டக்கெட் அரை சதம் கடந்தார். இந்த பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களை கடந்த நிலையில், இதற்கு பும்ரா செக் வைத்தார்.
ஜோ ரூட்டையும் தூக்கிய பும்ரா
அதாவது டக்கெட் 62 ரன்களில் பும்ரா பந்தில் கிளீன் போல்டானார். அதே வேளையில் மறுபக்கம் ஓலி போப்பும், ஜோ ரூட்டும் சிறப்பாக விளையாடினார்கள். அதிரடியாக ஸ்டைலீஷ் ஷாட்கள் மூலம் பவுண்டரிகளாக விளாசிய ஓலி போப் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 9வது சதத்தை விளாசினார். 13 பவுண்டரிகளுடன் 125 பந்தில் அவர் சதம் அடித்தார். மறுமுனையில் ஜோ ரூட்டும் பொறுப்பாக விளையாடிய நிலையில், பும்ரா மீண்டும் இந்த ஜோடியை பிரித்தார். 28 ரன்களில் ஆடிக் கொண்டிருந்த ஜோ ரூட் பும்ராவின் பந்துவீச்சில் கருண் நாயரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
ஹாரி ப்ரூக்குக்கு கிடைத்த அதிர்ஷ்டம்
இதன்பிறகு களம் கண்ட ஹாரி ப்ரூக்க்கும் டக் அவுட்டில் வெளியேறி இருக்க வேண்டியது. அதாவது பும்ராவின் ஷாட் பாலில் ஹாரி ப்ரூக் கேட்ச் ஆனார். இதனால் இந்திய வீரர்கள் துள்ளிக்குதித்தனர். ஆனால் நடுவர் அதை நோ பால் என அறிவித்தார். ரீப்ளையில் பும்ரா கிரீசுக்கு வெளியே காலை வைத்தது தெரியவந்தது. இதனால் ஹாரி ப்ரூக் அவுட்டில் இருந்து அதிர்ஷ்டத்தின் துணையால் தப்பினார். அத்துடன் 2வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இங்கிலாந்து அணி 2வது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்துள்ளது. ஓலி போப் 100 ரன்களுடனும், ஹாரி ப்ரூக் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.
பும்ராவின் பந்தில் தடுமாறிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள்
இந்திய அணி தரப்பில் பும்ரா 13 ஓவர்களில் 48 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் சாய்த்தார். மற்ற பவுலர்களான சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர், ஜடேஜா விக்கெட் எடுக்கவில்லை. இங்கிலாந்து அணி இந்திய அணியை விட 262 ரன்கள் பின்தங்கியுள்ளது. 3வது நாள் ஆட்டத்தில் இந்திய பவுலர்கள் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை விரைவாக ஆட்டமிழக்க செய்ய முயற்சி செய்வார்கள். இந்திய அணியில் பும்ரா மட்டுமே எதிர்பார்த்தபடி மிகச்சிறப்பாக பந்துவீசினார். அவரது பந்தை தடுத்து ஆடவே இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சிரமம் அடைந்தனர்.
சிராஜ், பிரசித் கிருஷ்ணா சொதப்பல்
ஆனால் பும்ராவுக்கு மற்ற பவுலர்கள் கொஞ்சம் ஒத்துழைப்பு கொடுத்திருந்தாலும் கூடுதல் விக்கெட்டுகளை எடுத்திருக்க முடியும். தொடக்கத்தில் ரன்களை வாரி வழங்கிய சிராஜ் பின்பு சரியான லைன் அண்ட் லெந்தில் பந்துவீசினார். ஆனால் விக்கெட் கிடைக்கவில்லை. அதே வேளையில் மிக மோசமாக பந்துவீசிய பிரசித் கிருஷ்ணா 10 ஓவர்களில் 56 ரன்களை வழங்கினாரே தவிர விக்கெட் எடுக்கவில்லை. ஷர்துல் தாக்கூருக்கு கேப்டன் சுப்மன் கில் அதிக ஓவர்கள் வழங்காதது ஆச்சரியம் அளித்தது.
பீல்டிங்கிலும் இந்திய வீரர்கள் மோசம்
தாக்கூர் 3 ஓவர்களில் 23 ரன்கள் கொடுத்தார். ஜடேஜாவாலும் விக்கெட் வீழ்த்த முடியவில்லை. இதேபோல் இந்திய அணியின் பீல்டிங்கும் சிறப்பாக இல்லை. ஜடேஜா, ஜெய்ஸ்வால் தலா 1 கேட்ச்களை கோட்டை விட்டனர். பவுண்டரி லைனில் இந்திய வீரர்கள் சில பவுண்டரிகளையும் பிடிக்கத் தவறினார்கள். ஆகவே இந்திய அணி பீல்டிங்கில் முன்னேற்றம் காண வேண்டியது அவசியமாகும்.