இந்திய அணியின் கேப்டனான முதல் போட்டியிலேயே சுப்மன் கில் ஐசிசி விதிமுறைகளை மீறியுள்ளார். இது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

Indian Captain Shubman Gill Breaks ICC Rules: இந்தியா, இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 113 ஓவர்களில் 471 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (101 ரன்), கேப்டன் சுப்மன் கில் (147 ரன்) மற்றும் ரிஷப் பண்ட் (134) ஆகியோர் சதம் விளாசினார்கள். 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி வலுவாக தொடங்கிய நிலையில் கேப்டன் சுப்மன் கில் ஐசிசி விதிமுறையை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

கருப்பு நிற சாக்ஸ் அணிந்து விளையாடிய சுப்மன் கில்

அதாவது இந்த போட்டியில் சுப்மன் கில் கருப்பு நிற சாக்ஸ் அணிந்து விளையாடியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) விதிகளின்படி டெஸ்ட் போட்டிகளில் வீரர்கள் வெள்ளை, கிரீம் அல்லது வெளிர் சாம்பல் நிற சாக்ஸ்களையே அணிந்து விளையாட வேண்டும். கருப்பு சாக்ஸ் அணிந்ததன் மூலம் ஐசிசியின் ஆடை மற்றும் உபகரணக் குறியீட்டின் பிரிவு 4ஐ சுப்மன் கில் மீறியுள்ளார்.

ஐசிசி விதியை மீறிய சுப்மன் கில்

ஐசிசி விதிகளின்படி சுப்மன் கில் முதன்முறையாக இந்த தவறை செய்துள்ளதால் ஐசிசியிடம் இருந்து அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்படலாம். மேலும் 12 மாத காலத்திற்குள் மீண்டும் மீண்டும் மீறினால் அபராதம் (போட்டிக் கட்டணத்தில் 75% வரை) அதிகரிக்கும். இந்த விதிமீறல் தற்செயலானதா அல்லது வேண்டுமென்றே லெவல் 1 மீறலா என்பதை போட்டி நடுவர் இப்போது தீர்மானிப்பார். பிந்தைய குற்றத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், கில்லுக்கு அவரது போட்டிக் கட்டணத்தில் 10 முதல் 20 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படலாம்.

அபார சதம் விளாசிய கில்

இந்திய அணிக்காக கேப்டன் பொறுப்பை ஏற்ற முதல் போட்டியிலேயே சுப்மன் கில் ஐசிசி விதிமுறையை மீறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்த சுப்மன் கில் 227 பந்துகளில் 19 பவுண்டரி, 1 சிக்சர்களுடன் 147 ரன்கள் விளாசினார். இதன்மூலம் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் டெஸ்ட் போட்டியிலே சதம் விளாசிய கேப்டன் என்ற பெருமையை விராட் கோலி, சுனில் கவாஸ்கர், விஜய் ஹசாரே ஆகியோருடன் சாதனை பட்டியலில் இணைந்தார் கில். மேலும் இந்த நீண்ட தொடரில் முதல் டெஸ்ட்டிலேயே சதம் அடித்து அணியில் ஒரு பாஸிடிவ் தன்மையை கொண்டு வந்துள்ளார்.