Asianet News TamilAsianet News Tamil

Ashes Series: முதல் இன்னிங்ஸில் செய்த தவறால் 2வது இன்னிங்ஸில் சுதாரித்த இங்கிலாந்து! ரூட், மலான் அபார பேட்டிங்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 147 ரன்களுக்கு ஆல் அவுட்டான இங்கிலாந்து அணி, 2வது இன்னிங்ஸில் சுதாரித்து சிறப்பாக ஆடிவருகிறது.
 

joe root and dawid malan saving england in second innings of first ashes test against australia
Author
Brisbane QLD, First Published Dec 10, 2021, 6:24 PM IST

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கடந்த 8ம் தேதி பிரிஸ்பேனில் தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடியது. இங்கிலாந்து அணியில் ஒரு வீரர் கூட பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 39 ரன்கள் தான் அடித்தார். ஆலி போப்ட் 35 ரன்களும், கிறிஸ் வோக்ஸ் 21 ரன்களும் அடித்தனர். ஜோ ரூட் (0), பென் ஸ்டோக்ஸ் (5) ஆகிய சீனியர் நட்சத்திர வீரர்கள் சொதப்பியதால் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி வெறும் 147 ரன்கள் மட்டுமே அடித்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் அருமையாக ஆடி 94 ரன்கள் அடித்தார். 6 ரன்னில் சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். அவர் தவறவிட்டதை, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் தவறவிடவில்லை. மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடிய டிராவிஸ் சதமடித்தார். சதத்திற்கு பின்னரும் சிறப்பாக ஆடி பெரிய இன்னிங்ஸ் ஆடிய டிராவிஸ் ஹெட், 152 ரன்கள் அடித்தார். பின்வரிசையில் மிட்செல் ஸ்டார்க் சிறப்பாக ஆடி 35 ரன்கள் அடிக்க, முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 425 ரன்களை குவித்தது.

258 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ரோரி பர்ன்ஸ் 13 ரன்னிலும், ஹசீப் ஹமீத் 27 ரன்னிலும் ஆட்டமிழக்க, 61 ரன்களுக்கே இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. முதல் இன்னிங்ஸை போல் விக்கெட் சரிந்தால் இன்னிங்ஸ் தோல்வி அடைய நேரிடும் என்பதை உணர்ந்து, ஜோ ரூட் மற்றும் டேவிட் மலான் ஆகிய இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடிவருகின்றனர்.

முதல் இன்னிங்ஸில் செய்த தவறில் பாடம் கற்றுக்கொண்ட ரூட்டும், மலானும் 2வது இன்னிங்ஸில் சுதாரிப்பாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தனர். 3ம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் அடித்துள்ளது. டேவிட் மலான் 80 ரன்களுடனும், கேப்டன் ஜோ ரூட் 86 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.  அரைசதம் அடித்து களத்தில் நன்கு செட்டில் ஆன ரூட் மற்றும் மலான் ஆகிய இருவருமே சதத்தை நெருங்குகின்றனர். எனவே 4ம் நாளான நாளைய ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாகவும் கடும் போட்டி நிறைந்ததாகவும் இருக்கும்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios