பும்ராவிற்கு வலி இல்லை; தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியை தொடங்கினார் - பிசிசிஐ!
காயம் காரணமாக முதுகில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஜஸ்ப்ரித் பும்ரா நேற்று முதல் தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனது பயிற்சியை தொடங்கியுள்ளார்.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளார் ஜஸ்ப்ரித் பும்ரா காயம் காரணமாக, ஆசிய கோப்பை, டி20 உலகக் கோப்பை, இலங்கைக்கு எதிரான தொடர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் மற்றும் ஐபிஎல் தொடர் என்று எல்லாவற்றிலிருந்தும் விலகினார். முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக நியூசிலாந்தில் அறுவை சிகிச்சை செய்தார். இப்போது அவர் நேற்று முதல் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியை தொடங்கியுள்ளார் என்றும், அடுத்த வாரம் ஷ்ரேயாஸ் ஐயர் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிசை மேற்கொள்ள இருக்கிறார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இது குறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அறுவை சிகிச்சை வெற்றிகரமாக இருந்தது. அவர் வலியில்லாமல் இருக்கிறார். அறுவை சிகிச்சைக்கு 6 வாரங்களுக்குப் பிறகு பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனது பயிற்சியை தொடங்கினார். மேலும், ஷ்ரேயாஸ் ஐயருக்கு கீழ் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட வலி காரணமாக அவர் அடுத்த வாரம் அறுவை சிகிச்சைக்கு செல்ல இருக்கிறார். அறுவை சிகிச்சை முடிந்த பிறகு அவரும் 2 வாரங்கள் அறுவை சிகிச்சை நிபுணர்களின் பராமரிப்பில் இருப்பார். அதன்பிறகு பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பும்ரா தனத் முழு உடல் தகுதியை நிரூபித்தால் வரும் ஜூன் 7ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.