முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியை வெறும்  110 ரன்களுக்கு சுருட்டியது இந்திய அணி. பும்ரா அபாரமாக பந்துவீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று கெனிங்டன் ஓவலில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல், பிரசித் கிருஷ்ணா.

இங்கிலாந்து அணி:

ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் (கேப்டன், விக்கெட் கீப்பர்), லியாம் லிவிங்ஸ்டோன், மொயின் அலி, க்ரைக் ஓவர்டன், டேவிட் வில்லி, ப்ரைடான் கர்ஸ், ரீஸ் டாப்ளி.

இதையும் படிங்க - ஐபிஎல்லில் ஆடும்போது ரெஸ்ட் தேவைப்படல.. இந்தியாவுக்காக ஆடுறதுனா மட்டும் வலிக்குது! சீனியர்களை விளாசிய கவாஸ்கர்

முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகிய இருவரும் களமிறங்கினர். ஜேசன் ராயை 2வது ஓவரிலேயே, ரன்னே அடிக்கவிடாமல் டக் அவுட்டாக்கி அனுப்பினார் பும்ரா. அதே 2வது ஓவரின் கடைசி பந்திலேயே ஜோ ரூட்டையும் டக் அவுட்டாக்கி அனுப்பினார்.

இதையடுத்து களத்திற்கு வந்த இங்கிலாந்து அணியின் மேட்ச் வின்னரான பென் ஸ்டோக்ஸை ஷமி டக் அவுட்டாக்கினார். ராய், ரூட், ஸ்டோக்ஸ் ஆகிய 3 முக்கியமான வீரர்களும் ரன்னே அடிக்காமல் டக் அவுட்டானார்கள். பேர்ஸ்டோவையும் வெறும் 7 ரன்னுக்கு பும்ரா வீழ்த்தினார். லியாம் லிவிங்ஸ்டோனையும் பும்ரா டக் அவுட்டாக்கினார்.

26 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து திணறிய நிலையில், பட்லர் 30 ரன்களும், மொயின் அலி 14 ரன்களும் அடித்து அணியின் ஸ்கோரை கொஞ்சம் உயர்த்தினர். ஓவர்டன் 8 ரன்னில் ஆட்டமிழக்க, 68 ரன்களுக்கே 8 விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து அணி. 9வது விக்கெட்டுக்கு டேவிட் வில்லியும் கர்ஸும் இணைந்து 35 ரன்களை சேர்த்தனர். சிறிய பிரேக் எடுத்துக்கொண்டு, மீண்டும் தனது ஸ்பெல்லை தொடங்கிய பும்ரா, முதல் பந்திலேயே கர்ஸை வீழ்த்தி, தனது அடுத்த ஓவரில் டேவிட் வில்லியையும் 21 ரன்களுக்கு போல்டாக்கினார்.

இதையும் படிங்க - 11 வருஷத்துக்கு முன் சூர்யகுமார் யாதவ் குறித்து ரோஹித் போட்ட டுவீட்..! இப்ப செம வைரல்

இதையடுத்து 25.2 ஓவரில் வெறும் 110 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆல் அவுட்டானது. அபாரமாக பந்துவீசிய பும்ரா 7.2 ஓவரில் வெறும் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய அணியின் வெற்றிக்கு வெறும் 111 ரன்கள் மட்டுமே தேவை என்பதால் இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றுவிடும்.