பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் சர்ச்சையில்லாமல் இருந்தால்தான் ஆச்சரியம். அந்தவகையில், சர்ச்சைகள் என்பது அந்த லீக் தொடரில் சர்வ சாதாரணம். குவெட்டா கிளாடியேட்டர்ஸ் மற்றும் பெஷாவர் ஸால்மி அணிகளுக்கு இடையேயான போட்டியில் கசப்பான சம்பவம் அரங்கேறியுள்ளது. 

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய், சர்ஃபராஸ் அகமது தலைமையிலான குவெட்ட கிளாடியேட்டர்ஸ் அணியில் ஆடிவருகிறார். குவெட்டா கிளாடியேட்டர்ஸ் மற்றும் பெஷாவர் ஸால்மி அணிகளுக்கு இடையேயான போட்டி கடந்த 22ம் தேதி(சனிக்கிழமை) நடந்தது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கிளாடியேட்டர்ஸ் அணி, 20 ஓவரில் 148 ரன்கள் அடித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராய், அதிரடியாக ஆடி 57 பந்தில் 73 ரன்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரை தவிர வேறு யாரும் சரியாக ஆடவில்லை. ராயின் அதிரடியால் கிளாடியேட்டர்ஸ் அணி 20 ஓவரில் 148 ரன்கள் அடித்தது. காம்ரான் அக்மலின் அதிரடியான சதத்தால் 149 ரன்கள் என்ற இலக்கை பெஷாவர் ஸால்மி அணி எளிதாக அடித்து வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் வஹாப் ரியாஸ் டெத் ஓவர்களில் நன்றாக ரிவர்ஸ் ஸ்விங் செய்தார். ரியாஸ் திடீரென நன்றாக ரிவர்ஸ் ஸ்விங் செய்ததை கண்ட ஜேசன் ராய், அவர் வீசிய 18வது ஓவரின் போது, “நீ நேர்மையாகத்தான் ரிவர்ஸ் ஸ்விங் செய்கிறாயா? அல்லது அதற்காக பால் டேம்பரிங் செய்தயா? என்று வஹாப் ரியாஸிடம் முகத்திற்கு நேராகவே கேட்டார். அதனால் கடுப்பான ரியாஸ், ஜேசன் ராயை கடுமையாக திட்டினார். இதையடுத்து களத்தில் நின்ற சர்ஃபராஸ், இருவரையும் சமாதானம் செய்யவைத்தார். 

இந்த சம்பவம் குறித்து குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி வெளியிட்ட அறிக்கையில், பந்தின் தன்மை மாற்றப்பட்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளது. ஆனால் பந்தை சேதப்படுத்தியது யார் என்று குறிப்பிடவில்லை. ஜேசன் ராய் களத்திலேயே வஹாப் ரியாஸிடம் கேள்வியெழுப்பிய நிலையில், அவர் சார்ந்த அணியும் பந்தின் தன்மை மாற்றப்பட்டிருந்ததாக தெரிவித்திருக்கிறது. எனவே பந்தை சேதப்படுத்தியது வஹாப் ரியாஸ் தானா அல்லது வேறு எந்த வீரருமா என்பது தெரியவில்லையென்றாலும் பந்து சேதப்படுத்தப்பட்டது உண்மை தான் என்பது தெரிகிறது. 

ஜேசன் ராய் - வஹாப் ரியாஸ் மோதல், 18வது ஓவரில் நடந்து முடிந்த நிலையில், அதை அத்துடன் விடாத வஹாப் ரியாஸ், முதல் இன்னிங்ஸ் முடிந்து களத்தைவிட்டு வெளியேறும்போது, ஜேசன் ராயிடம் சென்று அவரை வம்பிழுக்கும் விதமாக, அநாகரிகமான முறையில் நடந்துகொண்டார். ராயை கிண்டலடிக்கும் விதமாக நக்கலாக கை தட்டியும், அவரை விடாமல் துரத்தி துரத்தியும் வம்பிழுத்துள்ளார். அதிகபட்சமாக நடந்துகொண்ட பின்னரும் ஆத்திரம் தீராத வஹாப் ரியாஸ், ஜேசன் ராயை விரட்டி வம்பிழுக்க சென்றபோது, சக வீரர்கள் அவரை பிடித்து இழுத்து சென்றனர். அந்த வீடியோ இதோ...