இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான பாரம்பரியமான கிரிக்கெட் தொடர் ஆஷஸ். ஆஷஸ் தொடர் என்றாலே அனல் பறக்கும். இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியைப் போலவே, ஆஷஸ் தொடரும் இருக்கும். 

ஆஷஸ் தொடரின் முதல் போட்டி பர்மிங்காமில் நடந்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் 284 ரன்களும் இங்கிலாந்து அணி 374 ரன்களும் அடித்தன. 90 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்மித், இந்த இன்னிங்ஸிலும் சதமடித்து ஆஸ்திரேலிய அணியை காப்பாற்றினார். மேத்யூ வேடும் அபாரமாக ஆடி சதமடிக்க, ஆஸ்திரேலிய அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 487 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. 

இங்கிலாந்து அணி, நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 13 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி நாளில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 385 ரன்கள் தேவை. இது கண்டிப்பாக சாத்தியமில்லாதது. எனவே இங்கிலாந்து அணிக்கு ஒரே வழி, போட்டியை டிரா செய்வதுதான். அதற்கு நாள் முழுக்க, ஆல் அவுட்டாகிவிடாமல் ஆட வேண்டும். அப்படியான இக்கட்டான நிலையில், கடைசி நாள் ஆட்டத்தை ராயும் பர்ன்ஸும் தொடர்ந்தனர். 

களத்தில் நிலைத்து ஆடவேண்டிய கட்டாயத்தில் இறங்கிய அவர்கள் இருவருமே சோபிக்காமல் ஆட்டமிழந்துவிட்டனர். ராய் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். ராயின் விக்கெட்டை நாதன் லயன் வீழ்த்தினார். நாதன் லயனின் சுழலில் சிக்கி இங்கிலாந்து அணி அவரிடம் 6 விக்கெட்டுகளை இழந்தது. வெறும் 146 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆல் அவுட்டாக, ஆஸ்திரேலிய அணி 251 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் ராய் ஆட்டமிழந்து செல்லும்போது, அவரை ஆஸ்திரேலிய ரசிகர்கள் கிண்டலடித்துள்ளனர். ஏற்கனவே விக்கெட்டை இழந்த கடுப்பில் பெவிலியனுக்கு திரும்பிக்கொண்டிருந்த ராயை, ரசிகர்கள் கிண்டலடிக்க, கூட கொஞ்சம் கடுப்பான ராய், ஆஸ்திரேலிய ரசிகர்களை நோக்கி எச்சில் துப்பியுள்ளார். 

ரசிகர்களின் கிண்டலுக்கு எல்லாம் எச்சில் துப்ப வேண்டுமென்றால், வார்னரும் ஸ்மித்தும் துப்ப மைதானமே போதாது. ஏனெனில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடையை அனுபவித்து மீண்டும் அணிக்கு திரும்பிய ஸ்மித் மற்றும் வார்னரை வெளிநாட்டு ரசிகர்கள் மட்டுமல்லாது உள்நாட்டு ரசிகர்களே பயங்கரமாக கிண்டல் செய்தனர், திட்டினர். ஆஷஸ் தொடரில் கூட அவர்களை நோக்கி உப்புத்தாளை காட்டி கிண்டலடித்தனர். அதற்கெல்லாம் அவர்கள் எச்சில் துப்ப வேண்டுமெனில் சத்தியமாக மைதானம் பத்தாது.