டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு எதிரான வெற்றிக்கு பிறகு, தோனியை ஒரே வார்த்தையில் எப்படி புகழ்வீர்கள் என்ற கேள்விக்கு சாமர்த்தியமாக சிறந்த பதிலை அளித்துள்ளார் ஜடேஜா. 

சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடந்த போட்டியில், புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருந்த டெல்லி கேபிடள்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி, ரெய்னாவின் அதிரடி அரைசதம் மற்றும் தோனியின் மிரட்டலான ஃபினிஷிங்கால் 20 ஓவர் முடிவில் 179 ரன்களை குவித்தது. 

180 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியின் பேட்டிங் வரிசையை இம்ரான் தாஹிரும் ஜடேஜாவும் இணைந்து சரித்துவிட்டனர். சிஎஸ்கே ஸ்பின்னர்களின் அபாரமான பவுலிங் மற்றும் தோனியின் அசத்தலான விக்கெட் கீப்பிங்கால் டெல்லி அணி வெறும் 99 ரன்களுக்கே சுருண்டது. இதையடுத்து 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற சிஎஸ்கே, புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்தது.

இந்த போட்டியில் தோனி பேட்டிங், விக்கெட் கீப்பிங் என இரண்டிலுமே மிரட்டினார். ஒரு கேப்டனாக எப்போதுமே அவர் அணியை சிறப்பாக வழிநடத்துவார் என்பது தெரிந்ததே. ஆனால் நேற்றைய போட்டியில் அனைத்து வகையிலும் சிறப்பாக செயல்பட்டு அணியை வெற்றி பெற செய்தார். இந்த வெற்றியில் தோனியின் பங்களிப்பு அளப்பரியது. 

பேட்டிங்கில் 22 பந்துகளில் 44 ரன்களை குவித்ததோடு, கிறிஸ் மோரிஸ் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரையும் ஒரே ஓவரில் மின்னல்வேக ஸ்டம்பிங் செய்து வெற்றியை உறுதி செய்தார். ஆட்டநாயகன் விருதையும் வென்றார் தோனி. 

போட்டிக்கு பின்னர் பேசிய ஜடேஜாவிடம் தோனியை ஒரே வார்த்தையில் எப்படி புகழ்வீர்கள் என்று வர்ணனையாளர் கேட்டதற்கு, சற்றும் யோசிக்காமல் தோனி ஒரு ஜீனியஸ் என்று பதிலளித்தார். கிரிக்கெட்டில் தோனி ஒரு ஜீனியஸ் என்பதில் யாருக்குமே மாற்றுக்கருத்து இருக்க முடியாது.