இந்திய அணியில் தோனியின் எதிர்காலம் அவ்வளவுதான். இந்திய அணியின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு அடுத்த விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டை வளர்த்தெடுக்கும் பணியை இந்திய அணி தொடங்கிவிட்டது. ரிஷப் பண்ட்டுக்கு மாற்றாக விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனை உருவாக்கி, அதை செட் செய்துவிட்டு செல்வதற்காகவே தோனி இன்னும் ஓய்வு பெறாமல் இருப்பதாக தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்தார். 

ரிஷப் பண்ட் தான் இந்திய அணியின் எதிர்கால விக்கெட் கீப்பர் என்பது உறுதியாகிவிட்டது. அவருக்கு மாற்றாக இஷான் கிஷான், சஞ்சு சாம்சன் ஆகிய இருவரும் இருப்பார்கள். இந்திய அணியில் இதுவரை இஷான் கிஷான், சஞ்சு சாம்சன் ஆகிய இருவருக்கும் இடம் கிடைக்கவில்லை என்றாலும் அவர்கள் விரைவில் கண்டிப்பாக எடுக்கப்படுவார்கள்.

இந்திய அணியின் சிக்கலாக இருந்துவந்த நான்காம் வரிசை சிக்கலுக்கு தீர்வாக ஷ்ரேயாஸ் ஐயர் பார்க்கப்படுகிறார். இந்திய அணியில் முதல் மூன்று இடங்கள் வலுவாக உள்ளன. நான்காம் வரிசையில் ஷ்ரேயாஸ், அதன்பின்னர் ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, கேதர் ஜாதவ் அல்லது மனீஷ் பாண்டே என பேட்டிங் ஆர்டர் நிரந்தரமானதாக உள்ளது. 

இந்திய அணியின் மாற்று விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனாக விரைவில் அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படும் இஷான் கிஷான், துலீப் டிராபியில் ஆடியபோது பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மை நேஷன் ஆங்கில இணையதளத்துக்கு பேட்டியளித்தார். அப்போது, இஷான் கிஷான் உள்நாட்டு போட்டிகளிலும் இந்தியா ஏ அணியிலும் ஃபினிஷிங் ரோலை சிறப்பாக செய்துவரும் நிலையில், அவரிடம் அவரது ரோல் குறித்தும் பேட்டிங் ஆர்டர் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதிலளித்த இஷான் கிஷான், தற்போதைய சூழலில் எந்த வரிசையில் பேட்டிங் இறங்க நேர்ந்தாலும், அந்த வரிசையில் களமிறங்க மனதளவில் தெளிவாகவும் நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும். தொடக்க விரராகவோ அல்லது ஆறாம் வரிசையிலோ எந்த வரிசையிலும் இறங்கினாலும் அந்த வரிசைக்கு அர்த்தம் சேர்க்க வேண்டும். அணிக்காக எந்த வரிசையில் இறங்கியும் சிறப்பாக ஆட நான் தயாராக இருக்கிறேன். எனது கவனம் முழுவதும் அதில்தான் உள்ளது என்று எந்த பேட்டிங் வரிசையிலும் இறங்க தயார் என்றும் தன்னால் அதில் சிறப்பாக ஆடமுடியும் என்றும் இஷான் கிஷான் தெரிவித்துள்ளார். 

இஷான் கிஷான் உள்நாட்டு போட்டிகளிலும் இந்தியா ஏ அணியிலும் ஐபிஎல்லிலும் வெவ்வேறு வரிசைகளில் பேட்டிங் ஆடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.