ஐபிஎல் 15வது சீசனில் சிஎஸ்கே அணி, ருதுராஜ் கெய்க்வாட்டுடன் யாரை தொடக்க வீரராக இறக்கலாம் என்று இர்ஃபான் பதான் கருத்து கூறியுள்ளார். 

சிஎஸ்கே தீவிர பயிற்சி:

ஐபிஎல் 15வது சீசன் வரும் 26ம் தேதி தொடங்குகிறது. ஐபிஎல் நெருங்கிவிட்டதால் அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன. கடந்த சீசனில் 4வது முறையாக கோப்பையை வென்ற தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியும் தீவிரமாக தயாராகிவருகிறது.

ஏலத்தில் சிஎஸ்கே:

இந்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடந்ததால் ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் அதிகபட்சம் 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொண்டு மற்றவர்களை விடுவித்தன. அந்தவகையில், ஜடேஜா, தோனி, மொயின் அலி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்த சிஎஸ்கே அணி, ஃபாஃப் டுப்ளெசிஸ், பிராவோ, தீபக் சாஹர், அம்பாதி ராயுடு உள்ளிட்ட முக்கியமான பெரிய வீரர்களை விடுவித்தது.

ஆனால் ஏலத்தில் இவர்களில் தீபக் சாஹர், பிராவோ, ராயுடு ஆகியோரை மீண்டும் எடுத்தது. ஃபாஃப் டுப்ளெசிஸை எவ்வளவோ எடுக்க முயன்றும் முடியவில்லை. இதையடுத்து ஃபாஃப் டுப்ளெசிஸை வாங்கிய ஆர்சிபி அணி, அவரையே கேப்டனாகவும் நியமித்தது. 

இதையடுத்து சிஎஸ்கே அணிக்கு ருதுராஜுடன் தொடக்க வீரராக இறங்க ஓபனர் தேவை என்ற வகையில், நியூசிலாந்தின் டெவான் கான்வேவை எடுத்த சிஎஸ்கே அணி, ராபின் உத்தப்பாவையும் ஏலத்தில் எடுத்தது.

சிஎஸ்கே அணியின் தொடக்க வீரராக ருதுராஜுடன் டெவான் கான்வே தான் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் உத்தப்பாவை இறக்குவதே சிறந்தது என்று இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார்.

இர்ஃபான் பதான் கருத்து:

இதுகுறித்து பேசிய இர்ஃபான் பதான், டெவான் கான்வே வெளிநாடுகளில் ஆடுவதற்கு சிறந்தவர் தான். ஆனால் ஐபிஎல் போட்டிகள் மும்பை வான்கடே, சிசிஐ ஆகிய மைதானங்களில் தன நடக்கவுள்ளன. இந்த மைதானங்களில் ஆடுவதற்கு கான்வேவை காட்டிலும் ராபின் உத்தப்பாவே சிறந்தவர். உத்தப்பா மிகச்சிறந்த தொடக்க வீரர் ஆவார்.

கான்வேவை இறக்காமல் உத்தப்பாவை ஓபனிங்கில் இறக்கிவிட்டால், இலங்கை ஸ்பின்னர் மஹீஷ் தீக்‌ஷனாவை ஆடவைக்க வாய்ப்பு கிடைக்கும். ஆடம் மில்னே, மொயின் அலி மற்றும் பிராவோ ஆகிய மூவரும் கண்டிப்பாக ஆடுவார்கள். எனவே கான்வே அணிக்கு தேவைப்படவில்லை என்றால், மஹீஷ் தீக்‌ஷனாவை 4வது வெளிநாட்டு வீரராக ஆடவைக்க முடியும் என்றார் இர்ஃபான் பதான்.