இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி மற்றும் அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த ரெய்னா ஆகிய இருவரும் கடந்த 15ம் தேதி அடுத்தடுத்து ஓய்வு அறிவித்தனர். தோனியின் ஓய்வு அறிவிப்பில் வியப்பில்லை. ஆனால் 33 வயதே ஆகும் ரெய்னா, ஓய்வு அறிவித்தது பெரும் அதிர்ச்சி. 

இந்திய அணிக்கு 3 விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்று கொடுத்து, இந்திய கிரிக்கெட்டுக்கு மிகச்சிறந்த பங்காற்றிய தோனிக்கு ஃபேர்வெல் போட்டியை ஏற்பாடு செய்ய வேண்டும் என முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

இந்நிலையில், இர்ஃபான் பதான் இதுதொடர்பாக அருமையான ஒரு யோசனையை செய்துள்ளார். தோனி மட்டுமல்லாது தோனிக்கு முன்பாக ராகுல் டிராவிட், சேவாக், யுவராஜ் சிங், கம்பீர் என பல மேட்ச் வின்னர்கள் ஃபேர்வெல் போட்டியெல்லாம் இல்லாமல் எளிமையாக ஓய்வு அறிவித்தனர். அவர்களுக்கெல்லாம் ஃபேர்வெல் போட்டி ஏற்பாடு செய்யவில்லை என்ற வருத்தம் அவர்களுக்கு இருக்கிறதோ இல்லையோ ரசிகர்களுக்கு கண்டிப்பாக இருக்கிறது.

அந்தவகையில், இர்ஃபான் பதான், தான் உட்பட, அப்படி ஃபேர்வெல் மேட்ச் ஆடாமல் ஓய்வு பெற்ற, இந்திய கிரிக்கெட்டுக்கு சிறந்த பங்காற்றிய 11 வீரர்களை தேர்வு செய்து, அந்த அணிக்கும் தற்போதைய இந்திய அணிக்கும் இடையே ஒரு போட்டியை நடத்தலாம் என்று யோசனை தெரிவித்துள்ளார். 

இர்ஃபான் பதான் ஃபேர்வெல் லெவனில் தேர்வு செய்துள்ள வீரர்கள்:

கவுதம் கம்பீர், வீரேந்திர சேவாக், ராகுல் டிராவிட், விவிஎஸ் லட்சுமணன், யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, தோனி, அஜித் அகார்கர், பிரக்யான் ஓஜா, ஜாகீர் கான்.