முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய அயர்லாந்து அணியை 172 ரன்களுக்கு சுருட்டியது இங்கிலாந்து அணி.

இங்கிலாந்து - அயர்லாந்து இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் சவுத்தாம்ப்டனில் நடக்கிறது. முதல் போட்டி இன்று இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, அயர்லாந்தை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. 

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய அயர்லாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே டேவிட் வில்லியின் பவுலிங்கில் மளமளவென ஆட்டமிழந்தனர். அயர்லாந்து அணியின் தொடக்க வீரர்கள் பால் ஸ்டெர்லிங் மற்றும் டெலானி ஆகிய இருவரும் களத்திற்கு வந்தனர். முதல் ஓவரிலேயே பால் ஸ்டெர்லிங்கை வெறும் 2 ரன்களில் வீழ்த்தினார் டேவிட் வில்லி. டேவிட் வில்லி ஓராண்டாக இங்கிலாந்து அணியில் ஆடாத நிலையில், மீண்டும் கம்பேக் கொடுத்துள்ள அவர், அருமையாக வீசினார்.

முதல் ஓவரிலேயே ஸ்டெர்லிங்கை வீழ்த்திய வில்லி, தனது அடுத்த ஓவரில் அயர்லாந்து கேப்டன் ஆண்ட்ரூ பால்பிர்னியை வீழ்த்தினார். ஹாரி டெக்டாரை சாகிப் மஹ்மூத் டக் அவுட்டாக்க, தனது நான்காவது ஓவரில்(இன்னிங்ஸின் 7வது ஓவர்) டெலானியை 22 ரன்களில் வீழ்த்திய வில்லி, அதற்கடுத்த பந்திலேயே லார்கான் டக்கரை வீழ்த்தினார். 

இதையடுத்து அயர்லாந்து அணி  வெறும் 28 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் கெவின் ஓ பிரயன் மற்றும் காம்ஃபெர் ஆகிய இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஆனால் அந்த ஜோடியை அடில் ரஷீத் நிலைக்கவிடவில்லை. கெவின் ஓ பிரயனை 22 ரன்களில் வீழ்த்தினார். அதன்பின்னர் சிமி சிங் டக் அவுட்டானார். 79 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது அயர்லாந்து. ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடிய காம்ஃபெருடன் 8வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஆண்டி மெக்பிரைன் சிறப்பாக ஆடினார். 

காம்ஃபெரும் மெக்பிரைனும் இணைந்து 8வது விக்கெட்டுக்கு 66 ரன்களை சேர்த்தனர். 48 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 40 ரன்கள் அடித்த மெக்பிரைன் டாம் கரனின் பந்தில் ஆட்டமிழந்தார். அரைசதம் அடித்த காம்ஃபெர் கடைசி வரை களத்தில் இருக்க, மறுமுனையில் மெக்கார்த்தியை மஹ்மூத்தும் கிரைக் யங்கை டேவிட் வில்லியும் வீழ்த்த, 45வது ஓவரில் 172 ரன்களுக்கு ஆல் அவுட்டானது அயர்லாந்து. 

டேவிட் வில்லி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மற்ற வீரர்களையெல்லாம் வீழ்த்திய இங்கிலாந்து பவுலர்களால் காம்ஃபெரை மட்டும் கடைசிவரை வீழ்த்த முடியவில்லை. அவரை ஒருமுனையில் நிறுத்திவிட்டு, மறுமுனையில் விக்கெட்டுகளை வீழ்த்தித்தான் அயர்லாந்தை ஆல் அவுட் செய்தது இங்கிலாந்து. காம்ஃபெர் 59 ரன்களுடன் கடைசி வரை அவுட்டாகவில்லை. இங்கிலாந்து அணி இந்த இலக்கை விரட்டிவருகிறது.