பாகிஸ்தானை பந்தாடிய அயர்லாந்து – டி20 உலகக் கோப்பைக்கு முன் இந்திய அணிக்கு எச்சரிக்கை மணி!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அயர்லாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் இந்திய அணிக்கு எச்சரிக்கை மணி அடித்துள்ளது.
அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஜூன் மாதம் தொடங்க இருக்கும் டி20 உலகக் கோப்பைக்கான வார்ம் அப் போட்டியாக இருக்கும் வகையில் இந்த போட்டியில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நேற்று நடைபெற்றது.
இதில், முதலில் டாஸ் வென்ற அயர்லாந்து பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம், முகமது ரிஸ்வான், ஃபகர் ஜமான், ஷதாப் கான், இஃப்திகார் அகமது, ஷாகீன் அஃப்ரிடி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். முதலில் விளையாடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்தது. இதில், அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 57 ரன்கள் எடுத்தார்.
சயீம் அயூப் 45 ரன்கள் எடுக்க, இஃப்திகார் அகமது 37 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். பவுலிங்கைப் பொறுத்த வரையில் கிரைக் யங் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். மார்க் அடையர் மற்றும் கரேத் டெலானி இருவரும் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
பின்னர், கடின இலக்கை துரத்திய அயர்லாந்து அணியில் ஆண்ட்ரூ பால்பிர்னி அதிரடியாக விளையாடி 77 ரன்கள் குவித்தார். ஹாரி டெக்டர் 36 ரன்களும், ஜார்ஜ் டோக்ரெல் 24 ரன்களும் எடுக்கவே அயர்லாந்து 19.5 ஆவது ஓவரில் 5 விக்கெட்டுகள் இழந்து 183 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்தது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக அயர்லாந்து, இந்திய அணிக்கு எச்சரிக்கை மணி அடித்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவைத் தொடர்ந்து ஜூன் 1 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரையில் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் 9ஆவது டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெறுகிறது. இதில், இந்தியா, இலங்கை, இங்கிலாந்து, அயர்லாந்து, ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து, நேபாள், பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஓமன், அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், கனடா, பப்புவா நியூ கினியா, ஸ்காட்லாந்து, நியூசிலாந்து, நமீபியா, ஸ்காட்லாந்து, வங்கதேசம் என்று 20 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன.
இந்த தொடரில் இடம் பெற்ற 20 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விளையாடுகின்றன. இந்தியா தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி ஜூன் 5ஆம் தேதி நியூயார்க்கில் நடைபெறுகிறது.