ஐபிஎல் 2025 தொடரின் 69வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச, மும்பை 184 ரன்கள் எடுத்தது. சூர்யகுமார் யாதவ் 57 ரன்கள் எடுத்தார்.
ஐபிஎல் 2025 தொடரின் 69வது லீக் ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் மோதி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச முடிவு செய்தது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மா 24 ரன்களும், ரயான் ரிகெல்டன் 27 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். திலக் வர்மா 1 ரன்னில் நடையைக் கட்டினார். நிலைத்து நின்று ஆடிய சூர்யகுமார் யாதவ் 39 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார்.
வில் ஜாக்ஸ் (17), ஹர்திக் பாண்டியா (26), நமன் தீர் (20) ஆகியோரும் கேமியோ ஆட்டங்களை வெளிப்படுத்தி, அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினர். 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் எடுத்துள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் அணி சார்பில் அர்ஷ்தீப் சிங், மார்க்கோ யான்சென், விஜய்குமார் வைஷாக் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஹர்ப்ரீத் பிரார் ஒரு விக்கெட் எடுத்தார்.
185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங்கைத் தொடங்கியுள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணி தனது கடைசி 2 லீக் போட்டிகளில் தோல்வியைச் சந்தித்ததால், புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களுக்கான வாய்ப்பு இந்த இரு அணிகளுக்கும் கிடைத்துள்ளது.
இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி குவாலிஃபையர் 1 போட்டிக்குத் தகுதி பெறும். தோல்வியடையும் அணி, நாளை நடக்கும் கடைசி லீக் போட்டியின் முடிவைப் பொறுத்து மூன்றாவது அல்லது நான்காவது இடத்தைப் பிடிக்கும்.
