அகமதாபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸை 83 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. மாத்ரே மற்றும் கான்வே சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். சென்னை பந்துவீச்சாளர்கள் குஜராத் அணியை நிலைகுலையச் செய்தனர்.

அகமதாபாத்தில் இன்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி, குஜராத் டைட்டன்ஸ் (GT) அணியை 83 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அதிரடி அரைசதம் அடித்த சென்னை அணியின் இளம் வீரர் டெவால்ட் பிரெவிஸ் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.

இந்தத் தோல்வியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் முதல் 2 இடங்களைத் தக்கவைக்கும் வாய்ப்பை கேள்விக்குறி ஆக்கியுள்ளது.

சென்னை அணியின் பேட்டிங்

டாஸ் வென்ற குஜராத் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, சிறப்பாக தொடக்கம் கிடைத்தது. தொடக்க ஆட்டக்காரர்களான மாத்ரே 34 ரன்களும், டேவன் கான்வே 52 ரன்களும் அடித்தனர். பின் உர்வில் படேலும் அதிரடியாக 19 பந்துகளில் 37 ரன்கள் அடித்து நொறுக்கினார்.

மிடில் ஆர்டரில் டெவில் பிரெவிஸ் 23 பந்துகளில் 57 ரன்கள் விளாசி அசத்தினார். ரவீந்திர ஜடேஜா 18 பந்து 21 ரன்களும் சிவம் துபே 8 பந்துகளில் 17 ரன்களும் விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 230 ரன்கள் குவித்து வலுவான இலக்கை நிர்ணயித்தது. குஜராத் அணியின் பிரஷித் கிருஷ்ணா மட்டும் அபாரமாகப் பந்துவீசி 4 ஓவர்களில் 22 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்தார். சாய் கிஷோர், ரஷித் கான், ஷாரூக் கான் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர். 

குஜராத் டைட்டன்ஸ் தடுமாற்றம்

230 ரன்கள் என்ற கடின இலக்கை துரத்தி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் அபாரமாக பந்துவீசி, குஜராத் அணியின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தினர். குஜராத் டைட்டன்ஸ் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்துது.

அந்த அணி சார்பில் சாய் சுதர்ஷன் 28 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். நம்பிக்கை நட்சத்திரங்களாக இருந்துவந்த சுப்மன் கில் 13 ரன்னிலும் ஜோஸ் பட்லர் 5 ரன்னிலும் அவுட்டாகி ஏமாற்றினர். மற்ற வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 18.3 ஓவர்களில் வெறும் 147 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

சென்னை பந்துவீச்சின் மிரட்டல்

சென்னை அணியின் பந்துவீச்சில் நூர் அகமது 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். மகேஷ் தீக்‌ஷனா, கலீல் அகமது, அன்ஷுல் காம்போஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். கடைசி போட்டியில் வெற்றி பெற்றாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தை உறுதிசெய்துள்ளது.

ஐபிஎல் தொடரின் வரலாற்று முதல் முறையாக சிஎஸ்கே அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தைப் பெற்றிருக்கிறது.