ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப் தொடரின் மொனாக்கோ ஸ்பிரிண்ட் ரேஸில் இந்தியாவைச் சேர்ந்த குஷ் மைனி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளார். மொனாக்கோவில் F2 ரேஸில் வெற்றி பெற்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
ஃகபார்முலா 2 சாம்பியன்ஷிப் தொடரின் மொனாக்கோ ஸ்பிரிண்ட் ரேஸில் இந்தியாவைச் சேர்ந்த ரேசிங் வீரர் குஷ் மைனி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளார். இதன் மூலம் மொனாக்கோவில் F2 ரேஸில் வெற்றி பெற்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
பெங்களூருவைச் சேர்ந்த குஷ் மைனியின் இந்த வெற்றி இந்தியாவின் ஃபார்முலா 1 கனவுகளுக்குப் புத்துயிர் அளிப்பதாக அமைந்துள்ளது.
குஷ் மைனியின் சாதனை:
DAMS Lucas Oil அணிக்காகப் போட்டியிடும் 24 வயதான குஷ் மைனி, சனிக்கிழமை நடைபெற்ற ஸ்பிரிண்ட் ரேஸில் போலோ பொசிஷனில் (pole position) இருந்து தொடங்கி, ரேஸ் முடியும் வரை தனது ஆதிக்கத்தைச் செலுத்தி, "லைட்ஸ்-டு-ஃபிளாக்" (lights-to-flag) வெற்றியைப் பதிவு செய்தார். இந்த அசத்தலான வெற்றி, உலகின் மிகவும் சவாலான மொனாக்கோ ட்ராக்கில் பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றி குறித்து குஷ் மைனி பேசுகையில், “P1 மற்றும் மொனாக்கோவில் வெற்றி பெற்ற முதல் இந்தியன் நான். இது ஒரு பெரிய கௌரவம், உண்மையிலேயே இது ஒரு கனவு நனவானது போன்றது. DAMS அணிக்கும், எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன்” என்று தெரிவித்தார்.
இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது மைனி பெருமையுடன் பாடிய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. குஷ் மைனியின் இந்தச் சாதனையைத் தொடர்ந்து, அவருக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
ஆனந்த் மஹிந்திரா பாராட்டு:
தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் (X) பதிவில், "நீங்கள் உயர்ந்து நிற்கிறீர்கள், குஷ் மைனி, நாடும் உங்களுடன் உயர்ந்து நிற்கிறது. மொன்டே கார்லோவில் F2 ரேஸில் வெற்றி பெற்ற முதல் இந்தியராக குஷ் மைனி வரலாறு படைத்துள்ளார். மஹிந்திரா ரேசிங் அணியில் உங்களை வைத்திருப்பது எங்களுக்குப் பெருமை" என்று குறிப்பிட்டுள்ளார்.
JK ரேசிங் மற்றும் TVS ரேசிங் போன்ற இந்திய மோட்டார்ஸ்போர்ட் நிறுவனங்களும் குஷ் மைனியின் வளர்ச்சிக்கு ஆரம்பம் முதலே ஆதரவளித்து வருகின்றன.
BWT Alpine F1 அணியின் ரிசர்வ் டிரைவராகவும், மஹிந்திரா ரேசிங் ஃபார்முலா E அணியில் ஒரு வீரராகவும் இருக்கும் குஷ் மைனி, தனது அசாத்தியமான திறமையையும், சவால்களை எதிர்கொள்ளும் மன உறுதியையும் இந்த வெற்றியின் மூலம் நிரூபித்துள்ளார். அவரது இந்த வெற்றி இந்தியாவில் மோட்டார் வாகனப் போட்டிகளுக்கு உத்வேகம் அளிப்பதாக உள்ளது.
ஒரு காலத்தில் ஃபார்முலா 1 இந்திய கிராண்ட் பிரிக்ஸ் போட்டியை நடத்திய இந்தியா, அதிக செலவுகள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் பற்றாக்குறை மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் காரணமாக உலக மோட்டார்ஸ்போர்ட்டில் பின்தங்கியிருந்தது. ஆனால், குஷ் மைனியின் மொனாக்கோ வெற்றி, இந்தியாவில் மோட்டார்ஸ்போர்ட்டுக்குப் புத்துயிர் அளிக்கும் ஒரு புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது.
இந்த வெற்றியை அடுத்து குஷ் மைனி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஃபீச்சர் ரேஸ் போட்டிக்கும் அடுத்த வாரம் பார்சிலோனாவில் நடைபெறும் போட்டிக்கும் மைனி நம்பிக்கையுடன் தயாராகிறார்.
