ஐபிஎல் 15வது சீசனுக்கு முன்பாக ஆர்சிபி அணியின் கேப்டன்சியிலிருந்து விராட் கோலி விலகியது ஏன் அந்த அணியின் கிரிக்கெட் ஆபரேசன்களுக்கான டைரக்டர் மைக் ஹெசன் விளக்கமளித்துள்ளார்.
ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008ம் ஆண்டிலிருந்து ஆர்சிபி அணிக்காக ஆடிவரும் விராட் கோலி, 2013ம் ஆண்டிலிருந்து ஆர்சிபி அணியின் கேப்டனாக இருந்தார்.
ஆர்சிபி அணியின் கேப்டனாக இருந்து அந்த அணியை கோலி மிகச்சிறப்பாக வழிநடத்தியிருக்கிறார். பேட்டிங் சிறப்பாக ஆடி 6283 ரன்களை குவித்துள்ள கோலி, பேட்டிங், கேப்டன்சி ஆகிய இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு ஆர்சிபி அணிக்கு பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார்.
கோப்பையை வென்றிராத ஆர்சிபி:
ஆர்சிபி அணியின் செல்லப்பிள்ளையாக திகழும் கோலியின் சொந்த ஊராகவே மாறிப்போய்விட்டது பெங்களூரு. ஆனால் விராட் கோலி ஆர்சிபி அணிக்கு ஒரு ஐபிஎல் கோப்பையை கூட வென்று கொடுக்கவில்லை என்பது அவர் மீதான கடும் விமர்சனமாக தொடர்ந்துவந்தது. 2016 ஐபிஎல் சீசனில் ஃபைனல் வரை சென்ற ஆர்சிபி அணி ஃபைனலில் சன்ரைசர்ஸிடம் தோற்று முதல் முறையாக கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது. அதன்பின்னர் ஃபைனலுக்கு கூட ஆர்சிபி செல்லவில்லை.
விராட் கோலி கேப்டன்சியிலிருந்து விலகல்:
விராட் கோலி ஆர்சிபிக்கு ஐபிஎல் கோப்பையை வென்று கொடுக்கவில்லை என்பது கடும் விமர்சனமாக தொடர்ந்துவந்த நிலையில், ஆர்சிபி அணியின் கேப்டன்சியிலிருந்து திடீரென விலகினார் விராட் கோலி. டி20 உலக கோப்பையுடன் இந்திய டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகுவதாக அறிவித்த கோலி, ஆர்சிபி அணியின் கேப்டன்சியிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார்.
ஐபிஎல் 15வது சீசன் வரும் 26ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், ஆர்சிபி அணியின் புதிய கேப்டனாக ஃபாஃப் டுப்ளெசிஸ் நியமிக்கப்பட்டார். ஐபிஎல் 15வது சீசனில் டுப்ளெசிஸின் கேப்டன்சியில் கோலி ஆடவுள்ளார்.
இந்நிலையில், விராட் கோலி ஆர்சிபி அணியின் கேப்டன்சியிலிருந்து விலகியது ஏன் என அந்த அணியின் கிரிக்கெட் ஆபரேசன்களுக்கான டைரக்டர் மைக் ஹெசன் விளக்கமளித்துள்ளார்.
மைக் ஹெசன் விளக்கம்:
இதுகுறித்து பேசிய மைக் ஹெசன், விராட் கோலி அவரது அனைத்தையும் ஒரு கேப்டனாக ஆர்சிபி அணிக்கு கொடுத்துள்ளார். அவரது இதயம் மற்றும் ஆன்மா அனைத்தையும் வழங்கியுள்ளார். அவருக்கு கொஞ்சம் பிரேக் வேண்டுமென்பதால் கேப்டன்சியை ராஜினாமா செய்தார். ஆர்சிபி அணியில் ஒரு சீனியர் வீரராக, பேட்ஸ்மேனாக ஆட வேண்டும் என்ற அவரது எண்ணத்திற்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம் என்றார் மைக் ஹெசன்.
