இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை ஒருவரை சூதாட்டத்திற்கு அணுகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இங்கிலாந்து மகளிர் அணி கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் தொடரில் ஆடியது. அப்போது போட்டிகளுக்கு இடையே பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் மகளிர் அணியினர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, ஹோட்டலில் தங்கியிருந்த வீராங்கனை ஒருவரை, ஜிதேந்திர கோத்தாரி, ராகேஷ் பாப்னா என்ற இருவர் சந்தித்துள்ளனர். 

அவர்கள் இருவரும் தங்களை டெல்லியை சேர்ந்தவர்கள் என்றும் விளையாட்டு மேலாளர்கள் என்றும் அந்த வீராங்கனையிடம் அறிமுகம் செய்துகொண்டு, சூதாட்டத்தில் ஈடுபட வலியுறுத்தியுள்ளனர். அந்த ஒரு வீராங்கனையை வைத்து மற்ற வீராங்கனைகளையும் சூதாட்டத்துக்குள் இழுப்பதற்கான திட்டங்களையும் வைத்திருந்திருக்கின்றனர்.

இதையடுத்து இதுகுறித்து உடனடியாக அந்த வீராங்கனை பிசிசிஐ-யின் ஊழல் தடுப்பு பிரிவில் புகார் அளித்தார். இதையடுத்து ஊழல் தடுப்பு பிரிவினர் பெங்களூரு போலீசிடம் புகார் செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள பெங்களூரு போலீஸார், தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். 

அண்மையில் நடந்து முடிந்த தமிழ்நாடு ப்ரீமியர் லீக் 4வது சீசனில் சில வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களை சூதாட்டக்காரர்கள் வாட்ஸ் அப் மூலம் தொடர்புகொண்டு சூதாட்டத்தில் ஈடுபட வலியுறுத்தியதாகவும், இதுகுறித்து அந்த வீரர்கள் பிசிசிஐ ஊழல் தடுப்பு பிரிவில் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. இந்நிலையில், மகளிர் அணியிலும் சூதாட்ட சர்ச்சை எழுந்திருப்பது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.