உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், மாபெரும் கிரிக்கெட் திருவிழாவை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

1992ம் ஆண்டுக்கு பிறகு இந்த உலக கோப்பையில் தான் லீக் சுற்றில் அனைத்து அணிகளும் அனைத்து அணிகளுடனும் மோத உள்ளன. அதனால் இதன் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்த உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாக இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பார்க்கப்படுகின்றன. 

உலக கோப்பை தொடர் நடக்க உள்ள இங்கிலாந்து ஆடுகளங்கள் முழுக்க முழுக்க பேட்டிங்கிற்கு சாதகமாக உருவாக்கப்பட்டுள்ளன. ஒரு இன்னிங்ஸில் 500 ரன்கள் கூட அடிக்க வாய்ப்புள்ளது என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமே தெரிவித்துள்ளது. எனவே இந்த உலக கோப்பை தொடர் ஹை ஸ்கோரிங் தொடராக அமைய உள்ளது. 

ஒருநாள் போட்டிகளில் 400 ரன்களை கடப்பது என்பதே அரிதினும் அரிதான விஷயம். 1996 உலக கோப்பையில் கென்யாவுக்கு எதிராக இலங்கை அணி 398 ரன்களை குவித்தது. அதுதான் அதிபட்ச ஸ்கோராக இருந்தது. 2005ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி, 434 ரன்களை குவிக்க, அதை சேஸ் செய்து 438 ரன்களை குவித்தது தென்னாப்பிரிக்க அணி. அதன்பின்னர் 443 ரன்களை குவித்து ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச ஸ்கோரை அடித்த அணியாக இலங்கை இருந்தது. 

இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி, கற்பனை கூட செய்து பார்க்க முடியாத ஸ்கோர்களை அடித்துவருகிறது. பாகிஸ்தானுக்கு எதிராக 444 ரன்கள் அடித்த இங்கிலாந்து அணி, இலங்கையின் முந்தைய சாதனையை முறியடித்தது. அதன்பின்னர் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாட்டிங்காமில் நடந்த போட்டியில் இங்கிலாந்து அணி 481 ரன்களை குவித்தது. 

அண்மையில் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த ஒருநாள் தொடரில் அனைத்து போட்டிகளிலும் 340 ரன்களுக்கு மேலாக அசால்ட்டாக குவித்தது. பாகிஸ்தான் அணியும் சற்றும் சளைக்காமல் 3 போட்டிகளில் 340 ரன்களுக்கு மேல் குவித்தது. எனவே இந்த உலக கோப்பை ஹை ஸ்கோரிங் தொடர் என்பது உறுதியாகிவிட்டது. அதேபோல ஒரு இன்னிங்ஸில் 500 ரன்கள் என்பது சாத்தியப்படும் என்றே தெரிகிறது. 

இந்நிலையில், உலக கோப்பை அணிகளின் கேப்டன்கள் கலந்துகொண்ட பிரஸ்மீட்டில் ஹை ஸ்கோரிங் குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, இது ஒரு ஹை ஸ்கோரிங் தொடராக அமைய உள்ளது. ஆனால் உலக கோப்பையில் 260-270 ரன்களே சில நேரங்களில் சேஸ் செய்ய கடினமாக இருக்கும். தொடரின் தொடக்கத்தில் சில ஹை ஸ்கோரிங் போட்டிகள் இருக்கும். ஆனால் போகப்போக நெருக்கடி அதிகரிக்கும். நெருக்கடியான சூழலில் வெற்றி கட்டாயத்தில் எந்த அணியும் முதல் பந்திலிருந்தே அடிக்க முற்படாது. பாதுகாப்பாக ஆடவே நினைக்கும். அதனால் தொடரின் பிற்பாதியில் 250 ரன்களையே கூட எதிரணியை எடுக்கவிடாமல் தடுக்க முடியும் என்று கோலி தெரிவித்தார்.